search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆர்யன் கான்
    X
    ஆர்யன் கான்

    ஆர்யன் கானுக்கு இன்றும் ஜாமீன் வழங்கப்படவில்லை- விசாரணை ஒத்திவைப்பு

    நாளைய விசாரணையின்போது ஜாமீன் மனுக்கள் தொடர்பாக, போதைப்பொருள் தடுப்பு பிரிவு சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் அனில் சிங் பதிலளிப்பார்.
    மும்பை:

    சொகுசு கப்பலில் போதை விருந்து தொடர்பாக நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான், அர்பாஸ் மெர்சன்ட், முன்முன் தமேச்சா உள்ளிட்ட சிலரை போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் கைது செய்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை கிளப்பியது. 

    கைது செய்யப்பட்டுள்ள ஆர்யன் கான் கடந்த 8-ம் தேதி முதல் ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி 2 முறை கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். ஆனால், 2 முறையும் ஆர்யன் கானின் ஜாமீன் மனுவை கோர்ட்டு தள்ளுபடி செய்தது. அதன்பின்னர் ஜாமீன் வழங்கக் கோரி மும்பை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இதேபோல் அர்பாஸ் மெர்ச்சன்ட், முன்முன் தமேச்சா ஆகியோர் சார்பிலும் ஜாமீன் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. ஆர்யன் கான் சார்பில் மத்திய அரசின் முன்னாள் அட்டர்னி ஜெனரலான முகுல் ரோகக்தி ஆஜராகி வாதாடினார். 

    இந்நிலையில் ஜாமீன் மனுக்கள் மீது 2வது நாளாக இன்றும் விசாரணை நடைபெற்றது. ஆர்யன் கான் சார்பில் முகுல் ரோகத்கி, முன்முன் தமேச்சா சார்பில் அலி காஷிப் கான் தேஷ்முக், அர்பாஸ் மெர்ச்சன்ட் சார்பில் அமித் தேசாய் ஆகியோர் வாதாடினர்.

    முகுல் ரோத்தகி வாதாடும்போது, ‘கைது மெமோ கைதுக்கான உண்மையான, சரியான காரணத்தை அளிக்கவில்லை. குற்றவியல் சட்டத்தின் 50ஐ விட அரசியலமைப்பின் 22 வது பிரிவு முக்கியமானது. இந்த சட்டத்தை மீறும் வகையில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு செயல்பட்டுள்ளது.

    கைது செய்யப்பட்டதற்கான காரணம் குறித்து தெரிவிக்கப்படாமல் எந்த நபரையும் கைது செய்யக்கூடாது. அந்த நபருக்கு தனது வாதத்தை சொல்ல உரிமை உண்டு என்றும் அந்த சட்டம் கூறுகிறது. அவர் விரும்பும் வழக்கறிஞரை அணுகவும் வாய்ப்பளிக்கிறது. ஆர்யன் கானிடம் இருந்து பெரிய அளவிலான போதைப்பொருள் மீட்கப்பட்டதாகக் கூறி நீதிமன்றத்தை போதைப்பொருள் தடுப்பு அமைப்பு தவறாக வழிநடத்துகிறது’ எனக் கூறினார்.

    இதேபோல் அலி காஷிப் கான் தேஷ்முக், அமித் தேசாய் ஆகியோரும் தங்கள் வாதத்தை நிறைவு செய்தனர். இதையடுத்து விசாரணை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டது. நாளைய விசாரணையின்போது மூன்று பேரின் ஜாமீன் மனுக்கள் தொடர்பாக போதைப்பொருள் தடுப்பு பிரிவு சார்பில் கூடுதல் சொலிசிட்டர்  ஜெனரல் அனில் சிங் பதிலளிப்பார். அதன்பிறகே ஜாமீன் மனுக்கள் மீதான தீர்ப்பு வழங்கப்படும். 
    Next Story
    ×