search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆன்லைன் மூலம் திருமணம் செய்த தன்யாவிடம் திருமண பதிவு சான்றிதழை அதிகாரி வழங்கிய போது எடுத்த படம்.
    X
    ஆன்லைன் மூலம் திருமணம் செய்த தன்யாவிடம் திருமண பதிவு சான்றிதழை அதிகாரி வழங்கிய போது எடுத்த படம்.

    உக்ரைனில் வசிக்கும் வாலிபரை ஆன்லைனில் மணமுடித்த இளம்பெண்

    கேரளாவில் முதல் முறையாக திருவனந்தபுரத்தில் இருந்து உக்ரைனில் வசிக்கும் வாலிபரை இளம்பெண் ஒருவர் ஆன்லைனில் திருமணம் செய்து கொண்டார்.
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம், கொல்லம் மாவட்டம் புனலூரை சேர்ந்தவர் ஜீவன்குமார். இவர் உக்ரைன் நாட்டில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கும், திருவனந்தபுரம் கழக்கூட்டத்தை சேர்ந்த தன்யாவுக்கும் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது.

    இருவரும் கடந்த மார்ச் மாதம் சிறப்பு திருமண சட்டத்தின் கீழ் திருமணம் செய்ய புனலூர் சார்-பதிவாளர் அலுவலகத்தில் விண்ணப்பித்தனர். ஆனால் கொரோனா பரவல் காரணமாக ஜீவன்குமாரால் குறிப்பிட்ட நாளில் சொந்த ஊரான கேரளாவுக்கு வரமுடியவில்லை.

    இதையடுத்து ஆன்லைன் மூலம் திருமணத்தை நடத்த அனுமதிக்கக்கோரி இருவரும் கேரள ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு இது தொடர்பாக வெளியுறவு துறை, தகவல் தொழில் நுட்பத்துறையிடம் கருத்து கேட்டது. இதை பரிசீலித்த இரு துறைகளும் ஆன்லைன் மூலம் திருமணத்தை நடத்த அனுமதி வழங்கியது.

    இதையடுத்து நேற்று புனலூர் சார்-பதிவாளர் அலுவலகத்தில் வைத்து திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி மணமகள் தன்யா, மணமகன் ஜீவன்குமாரின் தந்தை தேவராஜன் மற்றும் இருவீட்டார் உறவினர்கள் வந்திருந்தனர்.

    ஆன்லைன் திருமணம்

    இதே வேளையில் உக்ரைன் நாட்டில் ஜீவன்குமாரும் ஆன்லைனில் தயாராக இருந்தார். இதையடுத்து சார்-பதிவாளர் டி.எம்.பிரோஸ் முன்னிலையில் ஆன்லைனில் காணொலி காட்சி மூலம் இருவருக்கும் திருமணம் நடந்தது. அப்போது, மணமகன் சார்பில் அவரது தந்தை தேவராஜன் பதிவேட்டில் கையெழுத்து போட்டார். இந்த திருமணத்தை மாவட்ட பதிவாளர் சி.ஜே.ஜான்சன் ஆன்லைன் மூலம் கண்காணித்தார்.

    திருமணம் முடிந்த சிறிது நேரத்தில் மணமகள் தன்யாவுக்கு திருமண சான்றிதழ் வழங்கப்பட்டது. ஆன்லைனில் திருமணம் நடப்பது கேரளாவில் இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×