search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    கொரோனாவால் குறைந்தது, இந்தியர்களின் ஆயுள் காலம் - ஆய்வில் அதிர்ச்சி தகவல்

    கொரோனாவுக்கு முன். கொரோனாவுக்கு பின் இந்தியர்களின் சராசரி ஆயுள் காலம் குறைந்திருக்கிறதா என்பதை கண்டறிவதற்கான ஒரு ஆய்வை, மும்பையில் உள்ள மக்கள் தொகை ஆய்வுக்கான சர்வதேச நிறுவனம் கையில் எடுத்தது.
    மும்பை:

    நாம் பிறந்ததில் இருந்து எவ்வளவு காலம் உயிர் வாழ்வோம் என்ற எதிர்பார்ப்பை ஆங்கிலத்தில் ‘லைப் எக்ஸ்பெக்டன்சி’ என்று ஆங்கிலத்தில் சொல்கிறார்கள்.

    ஒருவருடைய ஆயுள் காலம் என்பது அவர் ஆணா, பெண்ணா என்கிற பாலினம், வாழ்கிற இடம், சுற்றுச்சூழல், பொருளாதாரம், உணவு முறை, சுகாதார வசதிகள் எல்லாவற்றையும் பொருத்தே அமைகிறது. இதையும் தாண்டி பரம்பரைத்தன்மையும் இதில் அடங்கும் என்று சொல்லப்படுகிறது.

    இந்தியாவில் ஆண்களின் சராசரி ஆயுள் காலம் 69.5 வயது ஆகவும், பெண்களின் சராசரி ஆயுள் காலம் 72 வயது ஆகவும் இருந்து வந்தது. இது 2019-ம் ஆண்டு நிலவரம்.

    அதாவது கொரோனாவுக்கு முன். கொரோனாவுக்கு பின் இந்தியர்களின் சராசரி ஆயுள் காலம் குறைந்திருக்கிறதா என்பதை கண்டறிவதற்கான ஒரு ஆய்வை, மும்பையில் உள்ள மக்கள் தொகை ஆய்வுக்கான சர்வதேச நிறுவனம் (ஐ.ஐ.பி.எஸ்.) கையில் எடுத்தது.

    கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் அலைகளால் லட்சக்கணக்கான உயிர்கள் பலியானதால், நாடு முழுவதும் உள்ள இறப்புமுறைகளில் கொரோனா பெருந்தொற்றின் தாக்கத்தை ஆய்வு செய்வதற்காக இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    இந்த ஆய்வில் 145 நாடுகளின் ‘குளோபல் பர்டன் ஆப் டிசீஸ் ஸ்டடி’ மற்றும் ‘கோவிட் இந்தியா அப்ளிகேஷன் புரோகிராம் இன்டர்பேஸ் (ஏபிஐ)’ ஆகியவற்றின் மூலம் சேகரிக்கப்பட்ட தரவுகள் அடிப்படையாக கொள்ளப்பட்டன.

    இந்த ஆய்வின் முடிவில் வெளியாகி உள்ள அதிர்ச்சித்தகவல் வருமாறு:-

    இந்தியாவில் 2020-ம் ஆண்டு நிலவரப்படி ஆண்களின் சராசரி ஆயுள்காலம் 69.5 வயதில் இருந்து 67.5 வயதாகவும், பெண்களின் ஆயுள்காலம் 72 வயதில் இருந்து 69.8 வயதாகவும் குறைந்து இருக்கிறது.

    இந்த தகவலை ஐ.ஐ.பி.எஸ். உதவி பேராசிரியர் சூரியகாந்த் யாதவ் பகிர்ந்து கொண்டுள்ளார்.

    இதுபற்றி அவர் கூறும்போது, “கடந்த 10 ஆண்டுகளில் ஆயுள் காலம் அதிகரிப்பதில், நாம் கண்ட முன்னேற்றத்தை கொரோனா தாக்கம் அழித்து விட்டது. இந்தியாவில் இப்போது மனித ஆயுள் காலம் 2010-ம் ஆண்டு இருந்தது போல ஆகி விட்டது. இந்த நிலை மாற வேண்டுமானால் இன்னும் சில ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்” என்கிறார்.

    கொரோனா பெருந்தொற்றால் 35-79 வயது பிரிவினர், பெருமளவில் இறந்திருக்கிறார்கள். இந்த வயது பிரிவினர்தான், இந்தியாவில் மனிதர்களின் ஆயுள் வீழ்ச்சிக்கு பெருமளவில் பங்களிப்பு செய்துள்ளனர் என்றும் தகவல் சொல்கிறார் சூரியகாந்த் யாதவ்.

    அதே நேரத்தில் ஐ.ஐ.பி.எஸ். இயக்குனர் டாக்டர் கே.எஸ். ஜேம்ஸ் கூறுகையில், “ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் கடந்த காலங்களில் எச்.ஐ.வி., எய்ட்ஸ் நோய்களால் ஆயுள்காலம் பாதித்தது. ஆனால் சில ஆண்டுகளில் அது மீண்டு வந்தது” என தெரிவித்தார்.

    கோப்புபடம்

    ஆக, பெருந்தொற்றால் மனித ஆயுள் குறைந்திருக்கிறது என்பது நிதர்சனமான உண்மைதான்.

    கொரோனா வைரஸ் பெருந்தொற்று, மனித வாழ்வை பல்வேறு விதங்களில் பாதித்தது என்று கருதிக்கொண்டிருந்தோம். இப்போது ஆயுள்காலமும் குறைந்து இருக்கிறது என்பது பேரிடியாக மனித சமூகத்தை தாக்கி இருக்கிறது.

    Next Story
    ×