search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விசாரணைக்கு ஆஜராக வந்த அனன்யா பாண்டே
    X
    விசாரணைக்கு ஆஜராக வந்த அனன்யா பாண்டே

    போதைப் பொருள் வழக்கு- நடிகை அனன்யா பாண்டே நாளை மீண்டும் ஆஜராக உத்தரவு

    சொகுசு கப்பலில் போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கு தொடர்பாக போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் நடிகை அனன்யா பாண்டேவின் வீட்டில் சோதனை நடத்தினர்.
    மும்பை:

    மும்பையில் இருந்து கோவாவுக்கு பாலிவுட் நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கான் மற்றும் அவரது நண்பர்கள் சொகுசு கப்பலில் சென்றனர். அப்போது, தேசிய போதைப் பொருள் தடுப்பு படையினர், ஆர்யன் கான் உட்பட எட்டு பேரை கைது செய்தனர்.

    அவர்களிடம் இருந்து போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவர் தாக்கல் செய்த ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனை எதிர்த்து மும்பை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.  ஜாமீன் கிடைக்காததால், மும்பையில் ஆர்தர் சாலையில் உள்ள சிறையில் ஆர்யன் கான் உள்ளார்.

    இந்த நிலையில் சொகுசு கப்பலில் போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கு தொடர்பாக போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் நடிகை அனன்யா பாண்டேவின் வீட்டில் சோதனை நடத்தினர். விசாரணைக்காக அவரது லேப்டாப், செல்போன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    அத்துடன் விசாரணைக்கு ஆஜராகும்படி அனன்யா பாண்டேவிற்கு சம்மன் அனுப்பினர். இதனையடுத்து அனன்யா பாண்டே மற்றும் அவரது தந்தை சங்கி பாண்டே ஆகிய இருவரும் விசாரணைக்கு ஆஜரானார்கள். இன்றைய விசாரணை முடிவடைந்தது. மேலும் சில தகவல்களை பெற வேண்டியிருப்பதால், நடிகை அனன்யா பாண்டேவை நாளை காலை 11 மணிக்கு மீண்டும் விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி போதைப் பொருள் தடுப்பு பிரிவு உத்தரவிட்டுள்ளது.

    சொகுசு கப்பல் பயணத்தின் போது கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் சம்பந்தப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவரின் வாட்ஸ்அப் சாட்டிங்கில் அனன்யா பாண்டேயின் பெயர் இடம்பெற்றிருந்ததாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் விசாரணை நடத்தப்படுவதாக தெரிகிறது. 

    நடிகை அனன்யா பாண்டேவை விசாரிப்பதால் அவள் குற்றம் சாட்டப்பட்டவர் என்று அர்த்தமல்ல என போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி ஒருவர் கூறினார். அனன்யாவும் ஆர்யன் கானின் சகோதரி சுஹானாவும் தோழிகள் என்பது  குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×