search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெல்லி போலீஸ்
    X
    டெல்லி போலீஸ்

    பேஸ்புக் லைவில் தற்கொலை முயற்சி... மின்னல் வேகத்தில் செயல்பட்ட காவல்துறை

    டெல்லியைச் சேர்ந்த 43 வயது நபர், மனைவி பிரிந்து சென்றதாலும், உடல்நலக்குறைவால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாகவும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக கூறி உள்ளார்.
    புதுடெல்லி:

    டெல்லியைச் சேர்ந்த 43 வயது நபர் தற்கொலை செய்யப்போவதாக பேஸ்புக்கில் லைவ் வீடியோ வெளியிட்டிருப்பதாக பேஸ்புக் நிறுவனம், காவல்துறைக்கு அவசர மெயில் அனுப்பி உள்ளது. அந்த வீடியோவில் பேசிய நபர் அதிக அளவு மருந்து சாப்பிட்டு தற்கொலை செய்யப்போவதாக கூறுகிறார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த காவல்துறை, உடனடியாக களத்தில் இறங்கியது. 

    அந்த நபர் பிற்பகல் 1.30 மணிக்கு பேஸ்புக்கில் லைவ் வீடியோவை பதிவிட்டுள்ளார். பேஸ்புக் கணக்குடன் இணைக்கப்பட்ட செல்போன் எண்ணை வைத்து அவர் இருக்கும் பகுதி டெல்லி ரஜோரி கார்டன் என்பதை சைபர் கிரைம் போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து டெல்லி மேற்கு மற்றும் தென்மேற்கு மாவட்ட காவல்துறைக்கு தகவல் அனுப்பி உஷார்படுத்தப்பட்டது. பின்னர் ரஜோரி கார்டன் காவல் நிலையத்தில் இருந்து சென்ற போலீசார், அந்த நபரின் வீட்டை 3.15 மணிக்கு கண்டுபிடித்தனர். உள்ளே சென்று பார்த்தபோது, அந்த நபர் அரைகுறை மயக்கத்தில் விழுந்து கிடந்துள்ளார். 

    உடனடியாக அவரை  மட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். தீவிர சிகிச்சைக்கு பிறகு அவரது உடல்நிலை  சீரடைந்துள்ளது. அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். தற்கொலை முயற்சிக்கான காரணம் குறித்து கேட்டபோது, மனைவி பிரிந்து சென்றதாலும், உடல்நலக்குறைவால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாகவும் இந்த முடிவை எடுத்ததாக கூறி உள்ளார்.

    இதுபற்றி டெல்லி துணை கமிஷனர் கூறியதாவது:-

    அந்த நபர் 50 பாட்டில்கள் தைராய்டு சிகிச்சைக்கான டானிக்கை குடித்ததாக விசாரணையின்போது தெரிவித்தார். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அவரது மனைவி பிரிந்து சென்றுள்ளார். கடந்த ஆண்டு வேலையை இழந்துள்ளார். இதுதவிர பல்வேறு உடல்நல கோளாறுகளும் ஏற்பட்டதால் மன அழுத்தத்தில் இருந்துள்ளார். இதற்காக சிகிச்சை பெற்றுள்ளார். ஆனால் பல நாட்கள் மருந்துகள் உட்கொள்ளவில்லை. 

    தற்போது போபாலில் வசித்து வரும் மனைவியை இன்று காலையில் தொடர்பு கொண்டு பேசி, நேரில் பார்க்க வர விரும்புவதாக கூறி உள்ளார். ஆனால், வரக்கூடாது என மனைவி கூறியிருக்கிறார். இதனால் அவரது மாமனார், மாமியாருக்கு அழுத்தம் கொடுப்பதற்காக, பேஸ்புக்கில் லைவ் போட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். அவர் உடனடியாக மீட்கப்பட்டு தீன் தயாள் உபாத்யாய் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×