search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோட்டயத்தில் பெய்து வரும் மழையால் வீடுகள் முன்பு தேங்கி நிற்கும் வெள்ளம்.
    X
    கோட்டயத்தில் பெய்து வரும் மழையால் வீடுகள் முன்பு தேங்கி நிற்கும் வெள்ளம்.

    பாலக்காடு மங்களம் அணை அருகே பயங்கர நிலச்சரிவு- 50 வீடுகள் சேதம்

    கேரளாவில் வருகிற 24-ந் தேதி வரை பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது.
    திருவனந்தபுரம்:

    தென்கிழக்கு அரபிக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கேரளாவில் கடந்த வாரம் பலத்த மழை பெய்தது.

    கேரளாவில் பெய்த மழை காரணமாக அனைத்து அணைகளும் நிரம்பின. இதனால் அணைகளில் இருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டது. மழை நீரோடு அணை வெள்ளமும் சேர்ந்து கொள்ள கேரளாவே வெள்ளத்தில் மிதந்தது.

    இதற்கிடையே கோட்டயம், இடுக்கி மாவட்டங்களில் பெய்த மழை காரணமாக கோக்கையார் மற்றும் கூட்டிக்கல் பகுதியில் பலத்த நிலச்சரிவு ஏற்பட்டது. அங்கிருந்த வீடுகள் மண்ணில் புதைந்தது. இதில் குழந்தைகள் உள்பட பலர் மண்ணில் புதைந்தனர்.

    மழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 39 பேர் பலியாகி உள்ளனர். மழை பாதித்த பகுதிகளில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

    இதற்கிடையே பாலக்காடு மாவட்டம் மங்களம் அணை அருகே வடக்கஞ்சேரி பகுதியில் நேற்று மாலை மீண்டும் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் வி.டி.ஆர்.காலனி பகுதியில் உள்ள 50 வீடுகள் சேதமானது. ஓடத்தோடு, போத்தன்தோடு பகுதிகளிலும் பலத்த பாதிப்பு ஏற்பட்டது.

    தகவல் அறிந்து அங்கும் ராணுவத்தினரும், மீட்பு படையினரும் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலச்சரிவில் இதுவரை உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை என தெரிய வந்துள்ளது.

    இதற்கிடையே நிலச்சரிவு காரணமாக அந்த பகுதியில் உள்ள சாலைகள் அனைத்தும் மண் மூடி கிடந்தது. பல இடங்களில் சாலையும் பலத்த சேதம் அடைந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சேதமான சாலைகளை சீரமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    இதற்கிடையே கேரளாவில் வருகிற 24-ந் தேதி வரை பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது. தென் தமிழ்நாட்டின் கடலோர பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கேரளாவில் மழை பெய்யும் என்று கூறப்பட்டு உள்ளது.

    பினராயி விஜயன்

    இது தொடர்பாக முதல் மந்திரி பினராயி விஜயன்
    கூறும்போது, “கேரளாவில் மீண்டும் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டு உள்ளது. இதனால் மக்கள் அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

    தாழ்வான பகுதிகளில் இருப்போர் நிவாரண முகாம்களுக்கு வர வேண்டும். இதற்காக 304 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு உள்ளன. கேரளாவில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நடைபெறும் மீட்பு பணிகளில் தேசிய பேரிடர் மீட்பு குழுவின் 11 குழுக்கள் ஈடுபட்டுள்ளனர்” என்றார்.


    Next Story
    ×