search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஷாருக்கான்
    X
    ஷாருக்கான்

    நடிகர் ஷாருக்கான் ஜெயிலுக்கு சென்று மகனை நேரில் பார்த்து ஆறுதல்: தைரியமாக இருக்கும்படி கூறினார்

    போதைபொருள் விவகாரத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆர்யான் கானை, அவரது தந்தை ஷாருக்கான் இன்று நேரில் சந்தித்தார்.
    பிரபல இந்தி நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன்கான் கடந்த 3-ந்தேதி சொகுசு கப்பலில் போதை பொருள் பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்டார். அவருடன் அவரது கூட்டாளிகள் 7 பேரும் பிடிபட்டனர். அவர்களை கைது செய்த போதை தடுப்பு பிரிவினர் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

    சிறைக்குள் ஆர்யன்கான் மற்ற குற்றவாளிகளுடன் சேர்த்து அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு கைதி நம்பர் கொடுக்கப்பட்டுள்ளது. சில தினங்களுக்கு முன்பு அவரது கை செலவுக்காக ரூ.4 ஆயிரத்து 500-ஐ நடிகர் ஷாருக்கான் அனுப்பி இருந்தார்.

    ஆர்யன்கானை ஜாமீனில் எடுப்பதற்காக நடிகர் ஷாருக்கான் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டு இருந்தார். ஆனால் அவருக்கு ஜாமீன் வழங்க சிறப்பு கோர்ட்டு மறுத்துவிட்டது. வாட்ஸ்அப் தகவல்களில் ஆர்யன்கான் முதன்மை குற்றவாளி என்பதற்கு ஆதாரம் இருப்பதாக கூறி அவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது.

    இதையடுத்து ஆர்யன்கான் மும்பை ஐகோர்ட்டில் தன்னை விடுதலை செய்யக்கோரி மனுதாக்கல் செய்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. அப்போது ஆர்யன்கான் விடுதலை ஆவாரா? என்பது தெரியவரும்.

    ஆர்யன்கானுக்கு ஜாமீன் மறுக்கப்பட்டதால் அவரை அவரது குடும்பத்தினர் சந்தித்து பேச அனுமதி வழங்கப்படுவதாக மும்பை ஆர்தர் ஜெயில் நிர்வாகம் நேற்று அறிவித்தது. ஆர்யன்கான் வெளியில் இருந்து சட்ட விதிக்கு உட்பட்டு உதவிகளை பெறலாம் என்றும் சிறைத்துறை கூறி இருந்தது.

    இதன் காரணமாக நடிகர் ஷாருக்கான் இன்று காலை 9 மணிக்கு மும்பை ஆர்தர் சாலையில் உள்ள சிறைச்சாலைக்கு சென்றார். அங்கு அவர் அனுமதி பெற்று ஆர்யன்கானை சந்தித்து பேசினார். சுமார் 10 நிமிடங்கள் மகனுடன் ஷாருக்கான் பேசிக்கொண்டு இருந்தார்.

    அப்போது அவர் கண்ணீர் மல்க தைரியமாக இருக்கும்படி ஆர்யன்கானிடம் கேட்டுக் கொண்டார். இந்த சந்திப்பு மிகவும் உருக்கமானதாக இருந்ததாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    9.35 மணிக்கு ஷாருக்கான் அங்கிருந்து விடைபெற்று காரில் புறப்பட்டு சென்றார். ஷாருக்கான் சிறைக்கு வந்திருக்கும் தகவல் அறிந்ததும் ஏராளமானோர் ஆர்தர் சாலையில் குவிந்தனர். இதையடுத்து அங்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டது.
    Next Story
    ×