search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அயோத்தி ராமர் கோவில்
    X
    அயோத்தி ராமர் கோவில்

    அயோத்தியில் ராமர் கோவில் சிலை மீது சூரிய ஒளி விழும் வகையில் கட்ட திட்டம்

    2023-ம் ஆண்டு டிசம்பர் மாதத்துக்குள் கோவில் கர்ப்பகிரகம் தயாராகும் வகையில் வேகமாக கட்டுமான பணி நடக்கிறது என்று அறக்கட்டளையின் உறுப்பினர் கூறினார்.
    அயோத்தி:

    சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புப்படி, அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. ராமஜென்மபூமி அறக்கட்டளை இப்பணியை மேற்பார்வையிட்டு வருகிறது.

    அந்த அறக்கட்டளையின் உறுப்பினர் காமேஸ்வர் சவுபால் ஒரு செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    ஒவ்வொரு ராம நவமியன்றும் அயோத்தி ராமர் கோவிலுக்குள் ராமர் சிலை மீது சூரிய கதிர்கள் நேரடியாக விழுந்து, கர்ப்பகிரகம் ஒளிரும் வகையில் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.

    ஒடிசா மாநிலம் கோனார்க்கில் 13-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட சூரிய கோவிலில் சூரிய கதிர் நேரடியாக கோவிலுக்குள் விழுகிறது. அதை பின்பற்றி இந்த யோசனை உதித்துள்ளது.

    சூரிய கதிர்களை எப்படி விழச்செய்வது என்று வானியல் அறிஞர்கள், விஞ்ஞானிகள், தொழில்நுட்ப நிபுணர்கள் ஆகியோருடன் ஆலோசனை நடத்தி வருகிறோம். மேலும், தேசிய கட்டிட கட்டுமான நிறுவனம், டெல்லி ஐ.ஐ.டி., மும்பை ஐ.ஐ.டி., ரூர்க்கி ஐ.ஐ.டி. ஆகியவற்றை சேர்ந்த நிபுணர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.

    நவம்பர் 15-ந் தேதியில் இருந்து ராமர் கோவிலில் தூணின் அடிப்பகுதி கட்டுமான பணி தொடங்கும். அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து தூண்கள் மற்றும் அதன் மேற்பகுதி கட்டுமான பணி தொடங்கும்.

    கட்டுமான வரைபடத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. முதலில் திட்டமிடப்பட்ட 2 தளங்களுக்கு பதிலாக 3 தளங்கள் கட்டப்பட உள்ளன. மேலும், அருங்காட்சியகம், ஆவண அறை, ஆராய்ச்சி மையம், மாநாட்டு கூடம், சுற்றுலா மையம், நிர்வாக கட்டிடம், யோகா மையம், பசு காப்பகம் உள்ளிட்ட வசதிகளும் இடம்பெறும்.

    2023-ம் ஆண்டு டிசம்பர் மாதத்துக்குள் கோவில் கர்ப்பகிரகம் தயாராகும் வகையில் வேகமாக கட்டுமான பணி நடக்கிறது. அதன்பிறகு பக்தர்கள் தரிசனம் செய்யலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×