search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காங். செயற்குழு கூட்டம்
    X
    காங். செயற்குழு கூட்டம்

    நான் சொல்வதற்கு நீங்கள் அனுமதித்தால்... செயற்குழு கூட்டத்தில் பேசிய சோனியா காந்தி

    கட்சியில் உள்ள ஒவ்வொரு உறுப்பினரும் காங்கிரசின் மறுமலர்ச்சியை விரும்புகிறார்கள். ஆனால் அதற்கு ஒற்றுமை மற்றும் கட்சி நலன்களை முதன்மையாக வைத்திருப்பது அவசியம் என்றார் சோனியா காந்தி.
    பாராளுமன்றத்துக்கு 2019-ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியை சந்தித்தது. இதனால் காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராகுல்காந்தி விலகினார். இதையடுத்து 2019-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் காங்கிரஸ் கட்சியின் தற்காலிக தலைவராக சோனியா பொறுப்பேற்றார். ஆனால் உடல் நல பிரச்சினை காரணமாக சோனியாவால் முழுநேர அரசியலில் தீவிர கவனம் செலுத்த இயலவில்லை.

    இதன் காரணமாக காங்கிரஸ் உள்கட்சி விவகாரங் களில் உடனுக்குடன் முக்கிய முடிவுகள் எடுத்து அறிவிக்க முடியாத நிலை நிலவுகிறது.

    இந்தநிலையில் காங்கிரஸ் கட்சியை மீண்டும் வலிமை படுத்துவதற்கு உள்கட்சி தேர்தலை உடனடியாக நடத்தி புதிய தலைவரை தேர்வு செய்ய வேண்டும் என்று குலாம்நபி ஆசாத், கபில் சிபல், சசிதரூர் உள்பட 23 மூத்த தலைவர்கள் கோரிக்கை விடுத்தனர். இதன் காரணமாக அந்த 23 தலைவர்களும் சோனியா- ராகுலுக்கு எதிராக செயல்படுவதாக முத்திரை குத்தப்பட்டுள்ளது.

    காங்கிரசில் ஏற்பட்டுள்ள இந்த அதிருப்தி, கடந்த சில மாதங்களாக நீடித்து வருகிறது. சமீபத்தில் பஞ்சாப், கோவா மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியில் கடும் சலசலப்பு ஏற்பட்டது. இது அந்த இரு மாநிலங்களிலும் காங்கிரசுக்கான செல்வாக்கை கடுமையாக வீழ்ச்சியடைய வைத்துள்ளது.

    இதை குறிப்பிட்டு காங்கிரஸ் அதிருப்தி தலைவர்களில் ஒருவரான கபில்சிபல், சோனியாவுக்கு கடிதம் எழுதினார். காங்கிரசுக்கு உடனடியாக புதிய தலைவரை தேர்வு செய்ய வேண்டும் என்று கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார். இதற்கு காங்கிரஸ் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

    கபில்சிபலுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது வீட்டு முன்பு ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. இதனால் காங்கிரஸ் உள்கட்சி விவகாரம் மீண்டும் சூடு பிடித்தது. அதிருப்தியாளர் களை சமாளிக்க அடுத்த கட்ட நடவடிக்கையாக என்ன செய்யலாம் என்று சோனியா தீவிர ஆலோசனை நடத்தினார்.

    காங்கிரசில் உடனடியாக சீர்திருத்தங்களை கொண்டு வந்தால்தான் கட்சியை உயிர்ப்பிக்க முடியும் என்பதை சோனியா ஏற்றுக் கொண்டார். இதற்காக செயற்குழு கூட்டம் அக்டோபர் 16-ந தேதி டெல்லியில் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

    அதன்படி இன்று (சனிக் கிழமை) காலை டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் செயற்குழு கூட்டம் கூடியது. 18 மாதங்களுக்கு பிறகு காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அனைவரும் ஒரே இடத்தில் அமர்ந்து ஆலோசனை நடத்துவது இதுவே முதல் முறையாகும்.

    செயற்குழு கூட்டத்துக்கு சோனியா காந்தி தலைமை தாங்கி பேசினார். அவர் கூறியதாவது:-

    கட்சியில் உள்ள ஒவ்வொரு உறுப்பினரும் காங்கிரசின் மறுமலர்ச்சியை விரும்புகிறார்கள். ஆனால் அதற்கு ஒற்றுமை மற்றும் கட்சி நலன்களை முதன்மையாக வைத்திருப்பது அவசியம் ஆகும். எல்லாவற்றிற்கும் மேலாக அதற்கு சுயக்கட்டுப்பாடு மற்றும் ஒழுக்கம் அவசியமானது.

    காங்கிரஸ் கட்சிக்கு நான்தான் முழுநேர தலைவர். நான் சொல்வதற்கு நீங்கள் அனுமதித்தால் நான் கட்சியின் முழுநேர தலைவராக செயல்படுவேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    செயற்குழு கூட்டத்தில் ராகுல் உள்பட மூத்த தலைவர்கள் அனைவரும் பங்கேற்றனர். கொரோனா விதிகளை கடைப்பிடிக்கும் வகையில் தலைவர்கள் அனைவரும் சமூக இடை வெளியை கடைப் பிடித்து அமர்ந்திருந்தனர்.

    காங். செயற்குழு கூட்டம்

    கூட்டத்தில் பல்வேறு வி‌ஷயங்கள் குறித்து தலைவர்கள் விவாதித்தனர். குறிப்பாக உள்கட்சி தேர்தலை நடத்தி புதிய தலைவரை தேர்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை குறித்து தீவிரமாக ஆலோசனை நடத்தப்பட்டது.

    புதிய தலைவரை தேர்வு செய்வது தொடர்பாக மூத்த தலைவர்கள் மாறுபட்ட கருத்துக்களை தெரிவித்தனர். பெரும்பாலான தலைவர்கள் சோனியா தலைவர் பொறுப்பில் நீடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். சிலர் மீண்டும் ராகுல் தலைவராக வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.

    கூட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா முதல்முதலாக தனது கருத்தை இந்த பொதுக்கூட்டத்தில் வெளிப்படுத்தினார். இதையடுத்து காரசார விவாதம் நடந்தது. உள் கட்சி தேர்தலை எப்போது தொடங் குவது, எந்த காலக்கட்டத்தில் முடிப்பது என்பது பற்றி விவாதிக்கப்பட்டது.

    எனவே புதிய தலைவர் தேர்வு தொடர்பாக விரைவில் காங்கிரஸ் சார்பில் அறிவிப்புகள் வெளியாகும் என்று தெரிய வந்துள்ளது. என்றாலும் தற்போதைய சூழ்நிலையில் சோனியா தலைவர் பதவியில் நீடிக்க பெரும்பாலான தலைவர்கள் ஆதரவு அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

    உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா ஆகிய மாநிலங்களுக்கு அடுத்த ஆண்டு தொடக் கத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அந்த தேர்தலை வலுவான முறை யில் எப்படி எதிர்கொள்வது என்பது குறித்தும் கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது.

    கடந்த சில மாதங்களாக ராஜஸ்தான் மாநில முதல்-மந்திரி அசோக் கெலாட், சத்தீஸ்கர் முதல்-மந்திரி பூபேஷ் பாகல் ஆகியோருக்கு எதிராக சில எம்.எல்.ஏ.க்கள் சர்ச்சையை எழுப்பி உள்ளனர். அந்த மாநில காங்கிரஸ் உள் விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

    இவைதவிர விவசாயிகள் போராட்டம் மற்றும் உத்தரபிரதேசத்தில் விவசாயிகள் கொல்லப்பட்டது தொடர்பாக காங்கிரஸ் சார்பில் அடுத்து என்ன நடவடிக்கை எடுப்பது என்பது குறித்தும் மூத்த தலைவர்கள் விவாதித்தனர். நாட்டில் வறுமை அதிகரித்திருப்பது தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது.

    பெட்ரோல்-டீசல் விலை உயர்வு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு ஆகிய பிரச்சினைகளில் அடுத்தக்கட்டமாக காங்கிரஸ் சார்பில் என்ன செய்வது என்பது பற்றியும் பேசப்பட்டது.
    Next Story
    ×