கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் அஞ்சல் பகுதியை சேர்ந்த விஜய சேனன் என்பவரின் மகள் உத்ரா(வயது25). இவருக்கும் பத்தனம்திட்டை மாவட்டம் அடூரை சேர்ந்த சூரஜ்குமார்(27) என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
இந்தநிலையில் கடந்த ஆண்டு(2020) மே மாதம் 7-ந்தேதி பாம்பு கடிக்கப்பட்டதாக அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் உத்ரா அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்நிலையில் உத்ராவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது தந்தை விஜய சேனன் அப்போதைய கொல்லம் போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் செய்தார்.
அதில் ஏற்கனவே 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் 2-ந்தேதி கணவரின் வீட்டில் வைத்து பாம்பு கடித்ததாக உத்ரா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று குணமடைந்ததாகவும், இந்நிலையில் தற்போது மீண்டும் பாம்பு கடித்ததாக அவரது கணவரின் குடும்பத்தினர் கூறியிருப்பதால், கணவரின் குடும்பத்தினர் பாம்பை கடிக்க வைத்து உத்ராவை கொன்றிருக்கவேண்டும் என்று கூறியிருந்தார்.

இதையடுத்து அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். சொத்துக்காக மனைவி உத்ராவை கொலை செய்ததாகவும், அதே பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவரிடம் பாம்பை வாங்கி வீட்டில் வைத்திருந்தாகவும் கூறினார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
சொத்துக்கு ஆசைப்பட்டு மனைவியை பாம்பை கடிக்க வைத்து கொலை செய்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கு கொல்லம் மாவட்ட கூடுதல் செசன்சு கோர்ட்டில் நடந்து வந்தது.
அந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சூரஜ்குமார் குற்றவாளி என்று நீதிபதி நேற்றுமுன்தினம் அறிவித்தார். அவருக்கான தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்பட்டது.