search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்தியா, சீனா கொடி
    X
    இந்தியா, சீனா கொடி

    இந்தியா, சீனா இடையே 13-வது சுற்று பேச்சுவார்த்தை இன்று நடக்கிறது

    லடாக் எல்லை மோதல் தொடர்பாக இந்திய-சீன ராணுவ அதிகாரிகள் இதுவரை 12 சுற்று பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர்.
    புதுடெல்லி::

    லடாக்கின் கிழக்கு பகுதியில் கடந்த மே மாதம் அத்துமீறிய சீன ராணுவத்தால் இரு தரப்புக்கு இடையே மோதல் ஏற்பட்டது. பின்னர் ஜூன் மாதத்தில் இரு நாட்டு ராணுவத்துக்கு இடையே ஏற்பட்ட வன்முறையில் இரு தரப்பிலும் உயிரிழப்புகளும் ஏற்பட்டன.

    இதனால் இந்தியாவும், சீனாவும் தலா 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட வீரர்களை எல்லையில் குவித்ததால் பதற்றம் நீடித்தது. எனவே படைகளை திரும்பப் பெற்று பதற்றத்தைத் தணிப்பதற்காக இரு நாட்டு ராணுவத்துக்கு இடையே பல்வேறு சுற்று பேச்சுவார்த்தைகள் நடந்தன.

    இதன் பயனாக எல்லையில் உள்ள பங்கோங் சோ ஏரியின் வடக்கு மற்றும் தெற்கு கரையில் இருந்து கடந்த பிப்ரவரி மாதம் இரு தரப்பும் படைகளை திரும்பப்பெற்றன. இதைப்போல கடந்த ஜூலை 31-ந் தேதி நடந்த 12-வது சுற்று பேச்சுவார்த்தையை தொடர்ந்து கோக்ரா பகுதியில் இருந்து இந்தியாவும், சீனாவும் ராணுவத்தை விலக்கிக்கொண்டன.

    இந்நிலையில், இரு நாடுகளுக்கு இடையேயான 13-வது சுற்று பேச்சுவார்த்தை இன்று காலை 10.30 மணிக்கு நடக்கிறது. லடாக் அசல் எல்லைக் கட்டுப்பாட்டுக்கோடு பகுதியில் சீன பகுதிக்குள் அமைந்துள்ள மோல்டோ பகுதியில் இந்த பேச்சுவார்த்தை நடக்கிறது.

    இந்தப் பேச்சுவார்த்தையில் லே-ஐ மையமாக கொண்டு செயல்பட்டு வரும் 14-வது படைப்பிரிவு கமாண்டர் லெப்டினன்ட் ஜெனரல் பி.ஜி.கே.மேனன் தலைமையிலான அதிகாரிகள் இந்தியா சார்பில் பங்கேற்கின்றனர்.

    Next Story
    ×