search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரதமர் மோடி
    X
    பிரதமர் மோடி

    தமிழகம் உள்பட நாடுமுழுவதும் 35 இடங்களில் ஆக்சிஜன் உற்பத்தி ஆலை - பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

    கடந்த சில மாதங்களாக பிரதமர் பாதுகாப்பு நிதியின் திட்டத்தின் கீழ் இதுவரை 1,100-க்கும் மேற்பட்ட ஆலைகள் செயல்பாட்டுக்கு வந்துள்ளதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.
    புதுடெல்லி:

    கொரோனா 2-வது அலையின் போது நோயாளிகளுக்கு ஆக்சிஜன் கிடைப்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டது. இந்தியாவில் ஆஸ்பத்திரி தேவைக்காக உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜன் அப்போது தேவைக்கு போதுமானதாக இல்லை.

    எனவே ஆக்சிஜன் கிடைக்காமல் ஏராளமான நோயாளிகள் கடுமையான பாதிப்புக்கு ஆளானார்கள். அந்த நேரத்தில் அதை சமாளிப்பதற்காக இந்தியாவில் தொழில் தேவைக்காக உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜன் நிறுத்தப்பட்டு மருத்துவ தேவைக்காக உற்பத்தி செய்யப்பட்டது.

    மேலும் வெளிநாடுகளுக்கு ஆக்சிஜன் ஏற்றுமதி செய்வதும் நிறுத்தப்பட்டது.

    அடுத்ததாக இதேபோல ஆபத்தான நிலை ஏற்பட்டு விடாமல் தடுப்பதற்காக நாட்டின் அனைத்து பகுதிகளிலும் அரசு ஆஸ்பத்திரிகளில் ஆக்சிஜன் உற்பத்தி செய்வதற்கான ஆலையை நிறுவுவது மற்றும் ஆக்சிஜன் டேங்கர்களை அமைப்பது என்று மத்திய அரசு முடிவு செய்தது.

    அவசர காலங்களில் பயன்படுத்துவதற்காக பிரதமர் பாதுகாப்பு நிதி உருவாக்கப்பட்டது. அந்த நிதியில் இருந்து ஆக்சிஜன் நிலையங்களை உருவாக்குவது என்று முடிவு செய்தனர்.

    அதன்படி பிரதமர் நரேந்திரமோடி அவசர பாதுகாப்பு நிதியில் இருந்து நாடுமுழுவதும் அரசு மருத்துவ கல்லூரிகள், அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் முக்கிய இடங்களில் 1,224 ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்களை அமைக்க நிதி ஒதுக்கினார். அவற்றில் 1,100 ஆலைகள் ஏற்கனவே செயல்பாடுகளை தொடங்கி விட்டன.

    கோப்புபடம்

    இவற்றில் 35 பி.எஸ்.ஏ. ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகளை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி இன்று உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேசில் நடைபெற்றது. அங்கு கட்டப்பட்டிருந்த ஆக்சிஜன் ஆலையை 
    பிரதமர் மோடி
     தொடங்கி வைத்தார்.

    அதேநேரத்தில் நாடு முழுவதும் கட்டப்பட்ட மற்ற 34 ஆலைகளும் திறக்கப்பட்டன. அத்துடன் ஏற்கனவே கட்டப்பட்ட ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் செயல்பட்டுக்கு வந்தன.

    சென்னையில் ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனையில் 1.84 மெட்ரிக் டன் திறன் கொண்ட ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. அதையும் பிரதமர் திறந்து வைத்தார். தேனி, ராமநாதபுரம், சேலம், ஈரோடு போன்ற மாவட்டங்களில் பிரதமர் பாதுகாப்பு நிதியின் கீழ் அமைக்கப்பட்டிருந்த ஆக்சிஜன் நிலையங்களும் செயல்பாட்டுக்கு வந்தன.

    அந்தந்த இடங்களில் உள்ள அதிகாரிகள் எம்.பி., எம்,.எல்.ஏ.க்கள் இந்த நிகழ்ச்சியில் காணொலி மூலமாக கலந்துகொண்டனர். தமிழ் நாட்டில் மட்டும் பிரதமர் பாதுகாப்பு நிதியில் இருந்து 70 ஆக்சிஜன் நிலையங்கள் அமைப்பது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு மாநிலங்களிலும் ஆக்சிஜன் நிலையங்கள் திறக்கப்படும் நிகழ்ச்சியில் அந்தந்த மாநில சுகாதார மந்திரிகள் கலந்து கொண்டனர். காணொலி காட்சி மூலமாக பிரதமருடன் அவர்கள் உரையாடினார்கள்.

    சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் நடந்த விழாவில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்றார். இதே போல சென்னை ரெயில் பெட்டி தொழிற்சாலை (ஐ.சி.எப்) மருத்துவமனையிலும் ஆக்சிஜன் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. அதையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் எம்.பி.க்கள் ஆர்.எஸ்.பாரதி, நவநீதகிருஷ்ணன், ஐ.சி.எப். பொது மேலாளர் அதுல் குமார் அகர்வால் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

    ரிஷிகேசில் நடந்த தொடக்க விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது:-

    பல மாநிலங்களில் கொரோனா தடுப்பூசி 100 சதவீதம் செலுத்தப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் இதில் வெற்றிகண்ட உத்தரகாண்ட் மாநிலத்தை பாராட்டுகிறேன்.

    கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் இந்தியா தனது வலிமையை வெளிப்படுத்தியது. இந்தியாவில் தினமும் 900 மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜன் தேவைப்படுகிறது. இப்போது உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் நம்மிடம் 10 மடங்கு அதிக உற்பத்தி இருக்கிறது.

    உலகில் எந்த நாடும் நினைத்து பார்க்க முடியாத இலக்கை இந்தியா எட்டியுள்ளது. கடந்த சில மாதங்களாக பிரதமர் பாதுகாப்பு நிதியின் திட்டத்தின் கீழ் (பி.எம்.கேர்) இதுவரை 1,100-க்கும் மேற்பட்ட ஆலைகள் செயல்பாட்டுக்கு வந்துள்ளன.

    இப்போது ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆக்சிஜன் உற்பத்தி நடந்து வருகிறது.

    இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

    Next Story
    ×