search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டிகே சிவக்குமார்
    X
    டிகே சிவக்குமார்

    மேகதாது திட்ட பணிகளை ஒரு மாதத்தில் தொடங்க வேண்டும்: டி.கே.சிவக்குமார்

    கிருஷ்ணா, மகதாயி திட்டங்களையும் அமல்படுத்த இந்த அரசு ஆர்வம் காட்டவில்லை. கிருஷ்ணா விஷயத்தில் விவசாயிகள் போராட்டம் நடத்துகிறார்கள்.
    பெங்களூரு :

    கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

    முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை முன்பு நீர்ப்பாசனத்துறை மந்திரியாக இருந்தவர். மேகதாது திட்டத்தை தடுக்க தமிழகத்திற்கு உரிமை இல்லை என்று அவர் கூறியுள்ளார். இதை தான் நாங்களும் கூறி வருகிறோம். அவர் முதல்-மந்திரியான பிறகு மேகதாது திட்டத்தை செயல்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மத்திய அரசின் அனுமதிகளை பெற்று அந்த திட்ட பணிகளை இந்த அரசு தொடங்காதது ஏன்?.

    கர்நாடக சட்டசபை இடைத்தேர்தல் நடக்கிறது. அதனால் மேகதாது திட்ட பணிகளை ஒரு மாதத்தில் தொடங்க வேண்டும் என்று கெடு விதிக்கிறேன். இல்லாவிட்டால் நாங்கள் மாநில அரசுக்கு எதிராக தீவிரமான போராட்டம் நடத்துவோம். நீர்ப்பாசன திட்டங்களை அமல்படுத்துவதில் அரசு மந்தமாக செயல்படுவது சரியல்ல.

    கிருஷ்ணா, மகதாயி திட்டங்களையும் அமல்படுத்த இந்த அரசு ஆர்வம் காட்டவில்லை. கிருஷ்ணா விஷயத்தில் விவசாயிகள் போராட்டம் நடத்துகிறார்கள். மேகதாது திட்டத்திற்கு தமிழ்நாட்டின் நீர், நிலம், நிதி எதுவும் தேவை இல்லை.

    மத்திய-மாநிலத்தில் பா.ஜனதாவின் இரட்டை என்ஜின் அரசு உள்ளது. பெங்களூருவில் கனமழை பெய்து தாழ்வான பகுதிகளில் உள்ள கட்டிடங்களில் நீர் புகுந்து பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ஆனால் மாநகராட்சி அதிகாரிகள் அந்த இடங்களுக்கு நேரில் சென்று நிவாரண பணிகளை மேற்கொள்ளவில்லை. மாநிலத்தில் அரசே இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இந்த அரசை கேள்வி கேட்பவர்களே இல்லை.

    இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.
    Next Story
    ×