search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கபில்சிபில் வீட்டு முன்பு காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்ட காட்சி
    X
    கபில்சிபில் வீட்டு முன்பு காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்ட காட்சி

    தலைமை மீது விமர்சனம்: கபில்சிபில் வீட்டு முன்பு காங்கிரசார் போராட்டம்

    காங்கிரஸ் கட்சிக்கு நிரந்தர தலைமையை வலியுறுத்தி சோனியா காந்திக்கு கடிதம் எழுதிய 23 மூத்த தலைவர்களில் கபில்சிபிலும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    புதுடெல்லி:

    காங்கிரஸ் மூத்த தலைவரான கபில்சிபில் கட்சி தலைமை மீது விமர்சனத்தை முன் வைத்து உள்ளார். அவர் கூறியதாவது:-

    கட்சியில் இருந்து தலைவர்கள் வெளியேறுவது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து கட்சிக்கூட்டத்தில் விவாதிக்கப்பட வேண்டியது அவசியம். காங்கிரஸ் கட்சியில் இப்போது தலைவர்களே இல்லை. இதுபோன்ற முடிவுகளை தற்போது யார் எடுக்கிறார்கள் என்பதே தெரியவில்லை.

    கட்சியில் என்ன நடந்தாலும் காரிய கமிட்டியில் வைத்து விவாதிக்க வேண்டும் என்று கூறுகிறோம். கட்சி அமைப்பு வலுப்படுத்தப்பட வேண்டும். பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும். ஆனால் கட்சியை வலுப்படுத்தினால்தான் அது நடக்கும்.

    எந்த ஒரு நாட்டிலோ அல்லது அரசியல் கட்சியிலோ அதிகார கட்டமைப்பில் தனி நபர் ஏகாதிபத்திய நடைமுறைக்கு இடம் கிடையாது. உங்களுடைய கருத்துக்களை நாங்கள் கேட்பது போல எங்களது கருத்துக்கும் மதிப்பளியுங்கள். எங்களை பேச அனுமதியுங்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கபில் சிபில்

    கபில்சிபிலின் இந்த பேச்சு காங்கிரஸ் கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தநிலையில் கபில்சிபில் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் அவரது வீட்டு முன்பு காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினார்கள்.

    டெல்லி ஜோர்பாக் பகுதியில் உள்ள கபில்சிபில் வீட்டு முன்பு டெல்லி காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள் ஏராளமானோர் குவிந்தனர். அவர்கள், “கபில்சிபில் விரைவில் குணமடைந்து வாருங்கள்” என்ற பதாகைகளை ஏந்தி இருந்தனர். மேலும் அவருக்கு எதிராக கோ‌ஷங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கபில்சிபில் வீட்டை நோக்கி தக்காளிகளை வீசினார்கள். மேலும் அங்கிருந்த கார் சேதப்படுத்தப்பட்டது.

    காங்கிரசார் போராட்டம் காரணமாக அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். போலீசார் காங்கிரசாரை முன்னேற விடாமல் தடுத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

    காங்கிரஸ் கட்சிக்கு நிரந்தர தலைமையை வலியுறுத்தி சோனியா காந்திக்கு கடிதம் எழுதிய 23 மூத்த தலைவர்களில் கபில்சிபிலும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதையும் படியுங்கள்...வட அரபிக்கடலில் ‘ஷாகீன்’ புயல்- மீனவர்களுக்கு எச்சரிக்கை

    Next Story
    ×