search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    202 நாட்களில் இல்லாத அளவில் கொரோனா ஒருநாள் பாதிப்பு சரிவு

    கொரோனா பாதிப்பால் கேரளாவில் 58, மகாராஷ்டிராவில் 32 பேர் உள்பட நாடு முழுவதும் நேற்று 179 பேர் இறந்துள்ளனர். இதனால்மொத்த பலி எண்ணிக்கை 4,47,373 ஆக உயர்ந்தது.
    புதுடெல்லி:

    இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாள் தோறும் குறைந்து வரும் நிலையில் நேற்று 20 ஆயிரத்திற்கும் கீழ் சரிந்துள்ளது.

    இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 18,795 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளது.

    கடந்த மார்ச் மாதம் 9-ந்தேதி நிலவரப்படி ஒரு நாள் பாதிப்பு 17,921 ஆக இருந்தது. அதன்பிறகு 202 நாட்களில் இல்லாத அளவு நேற்றைய பாதிப்பு 20 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. மொத்த பாதிப்பு 3 கோடியே 36 லட்சத்து 97 ஆயிரத்து 581 ஆக உயர்ந்தது.

    விடுமுறைநாளான நேற்று முன்தினம் நாடு முழுவதும் பரிசோதனை 11.65 லட்சமாக குறைந்திருந்தது. இதுவும், தினசரி பாதிப்பு இந்த அளவில் குறைய ஒரு காரணமாக கூறப்படுகிறது.

    கொரோனா வைரஸ்


    கேரளாவில் 5 வாரங்களில் இல்லாத அளவில் நேற்று பாதிப்பு 11,699 ஆக குறைந்தது. மிசோரத்தில் 1,846, தமிழ்நாட்டில் 1,657 பேருக்கு புதிதாக தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.

    கொரோனா பாதிப்பால் கேரளாவில் 58, மகாராஷ்டிராவில் 32 பேர் உள்பட நாடு முழுவதும் நேற்று 179 பேர் இறந்துள்ளனர். இது கடந்த மார்ச் 22-ந் தேதிக்கு பிறகு 6 மாதங்களில் இல்லாத அளவில் ஒரு நாள் பலி எண்ணிக்கையில் குறைவு ஆகும். மொத்த பலி எண்ணிக்கை 4,47,373 ஆக உயர்ந்தது. இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவல் 1,38,902 பேர் அடங்குவர்.

    கொரோனாவின் பிடியில் இருந்து நேற்று 26,030 பேர் மீண்டு வீடு திரும்பினர். இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 29 லட்சத்து 58 ஆயிரத்து 002ஆக உயர்ந்தது.

    தற்போதைய நிலவரப்படி 2,92,206 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இதற்கிடையே நேற்று நாடு முழுவதும் 13,21,780 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

    இதுவரை மொத்தம் 56.57 கோடி மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.


    Next Story
    ×