search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குமாரசாமி
    X
    குமாரசாமி

    கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சியின் அழிவு இறுதிக்கட்டத்தில் உள்ளது: குமாரசாமி

    ஜனதா தளம் (எஸ்) குறித்து பேசாவிட்டால் சித்தராமையாவுக்கு தூக்கம் வருவது இல்லை. அவர் நமது கட்சி குறித்து விமர்சிப்பதை நிறுத்த வேண்டும்.
    பெங்களூரு :

    ஜனதா தளம் (எஸ்) கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் பெங்களூரு அருகே பிடதியில் உள்ள கேதகானஹள்ளியில் உள்ள குமாரசாமியின் பண்ணை வீட்டில் நேற்று நடைபெற்றது. இதில் எம்.எல்.ஏ.க்கள், சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தவர்கள் கலந்து கொண்டனர். இதில் தேவேகவுடா கலந்து கொண்டு பேசினார். முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி இந்த கூட்டத்தில் பேசியதாவது:-

    ஜனதா தளம் (எஸ்) 30 எம்.எல்.ஏ.க்களின் கட்சி அல்ல. இவ்வாறு கூறும் சித்தராமையா போன்றோருக்கு பதிலளிக்கும் காலம் தொலைவில் இல்லை. எங்கள் கட்சியை தரக்குறைவாக விமர்சிப்பவர்கள் அரசியல் ரீதியாக மூலையில் சேருவது உறுதி. ஜனதா தளம் (எஸ்) கட்சியின முதுகில் குத்தும் வேலையை காங்கிரஸ் செய்கிறது. கர்நாடகத்தில் கூட்டணி ஆட்சி அமைந்த பிறகும் நமது கட்சியை ஒழிக்க காங்கிரஸ் தலைவர்கள் சிலர் திட்டமிட்டனர்.

    தரம்சிங் முதல்-மந்திரியாக இருந்தபோதும். நமது கட்சியை உடைக்க முயற்சி செய்தனர். ஜனதா தளம் (எஸ்) கட்சியை காப்பாற்றும் நோக்கத்தில் தான் பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்து ஆட்சி நடத்தினோம். ஆனால் பா.ஜனதாவுக்கு அவர்களின் மறைமுக திட்டத்தை செயல்படுத்த வாய்ப்பு வழங்கவில்லை. காங்கிரஸ், பா.ஜனதாவுடன் ஜனதா தளம் (எஸ்) கூட்டணி சேர்ந்து ஆட்சி அமைக்கிறது என்று சித்தராமையா சொல்கிறார்.

    அகில இந்திய அளவிலும், கர்நாடகத்திலும் பா.ஜனதா வளர காங்கிரஸ் தான் காரணம். காங்கிரஸ் வேர்கள் பலம் இழந்து வருகிறது. கர்நாடகத்தில் 2023-ம் ஆண்டு நடைபெறும் சட்டசபை தேர்தலில் அக்கட்சி தோல்வி அடையும். மோடி பிரதமராக நேரடி காரணம் காங்கிரஸ் தான். தெலுங்கானா, கேரளா, தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் காங்கிரஸ் அழிந்துவிட்டது. கர்நாடகத்திலும் அக்கட்சியின் அழிவு இறுதிக்கட்டத்தில் உள்ளது.

    ஜனதா தளம் (எஸ்) குறித்து பேசாவிட்டால் சித்தராமையாவுக்கு தூக்கம் வருவது இல்லை. அவர் நமது கட்சி குறித்து விமர்சிப்பதை நிறுத்த வேண்டும். மக்களுக்காக கர்நாடகத்தில் ஜனதா தளம் (எஸ்) ஆட்சியை அமைக்க வேண்டும்.

    இவ்வாறு குமாரசாமி பேசினார்.

    இந்த கூட்டத்தில் அக்கட்சியின் மாநில தலைவர் எச்.கே.குமாரசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×