search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்க கோரி திருப்பதியில் இன்று காலை மறியலில் ஈடுபட்ட பக்தர்கள்.
    X
    இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்க கோரி திருப்பதியில் இன்று காலை மறியலில் ஈடுபட்ட பக்தர்கள்.

    திருப்பதியில் இலவச தரிசன டிக்கெட் வழங்காததால் பக்தர்கள் சாலை மறியல்

    இலவச தரிசன டிக்கெட்டுகளை வழங்கக்கோரி பக்தர்கள் மறியலில் ஈடுபட்ட சம்பவம் திருப்பதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் 8 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் ரூ.300 ஆன்லைனில் டிக்கெட்டுகள் வெளியிடப்படுகின்றன. கொரோனா 3-வது தொற்று காரணமாக இலவச தரிசனம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில் இலவச தரிசன டிக்கெட்டுகளை வழங்க வேண்டும் என பக்தர்கள் சார்பில் திருப்பதி தேவஸ்தானத்திற்கு கோரிக்கை விடுத்தனர்.

    பக்தர்களின் கோரிக்கையை ஏற்று தேவஸ்தானம் சோதனை ஓட்டமாக சித்தூர் மாவட்டத்தை சேர்ந்த 2 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டும் பஸ் நிலையம் அருகே உள்ள ஸ்ரீநிவாசம் விடுதியில் தினமும் 2 ஆயிரம் இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்கி வந்தனர்.

    வெளி மாவட்ட, மாநில பக்தர்களும் இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்க வேண்டும் என திருப்பதி தேவஸ்தானத்துக்கு கோரிக்கை விடுத்தனர்.

    இதையடுத்து இலவச தரிசன டிக்கெட்களின் எண்ணிக்கை 8,000 ஆக உயர்த்தப்பட்டு வெளிமாநில பக்தர்களுக்கும் வழங்கப்பட்டன.

    தரிசன டிக்கெட்டுகளை பெறுவதற்காக இரவு முதல் ஏராளமான பக்தர்கள் வரிசையில் காத்திருந்து டிக்கெட்டுகளை பெற்று சென்றனர். டிக்கெட்டுகளை பெறுவதற்காக பக்தர்கள் முண்டியடித்து சென்றதால் அவர்கள் இடையே அடிக்கடி தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    இதனால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டதால் இலவச தரிசன டிக்கெட்டுகளை ஆன்லைனில் வழங்க தேவஸ்தானம் முடிவு செய்தது.

    இதையடுத்து 8000 இலவச தரிசன டிக்கெட்டுகள் நாளை முதல் ஆன்-லைனில் வெளியிடப்படும் என ஏற்கனவே தேவஸ்தானம் அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. இதனால் இன்றைய இலவச தரிசன டிக்கெட்டுகள் நேற்று வழங்கப்பட்டு விட்டன.

    இந்த நிலையில் நேற்று இரவு முதல் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் இலவச தரிசன டிக்கெட்டுகளை பெறுவதற்காக திருப்பதி பஸ் நிலையம் அருகே உள்ள ஸ்ரீநிவாசம் விடுதி முன்பாக விடியவிடிய காத்திருந்தனர். தேவஸ்தான ஊழியர்கள் இலவச தரிசன டிக்கெட் வழங்கும் கவுண்டர்களை திறக்கவில்லை. டிக்கெட் இன்று வழங்கப்படாது என்பது பக்தர்களுக்கு அப்போதுதான் தெரிய வந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த பக்தர்கள் பஸ் நிலையம் எதிரே உள்ள சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். சுமார் 1 மணி நேரத்திற்கு மேல் பக்தர்கள் மறியலில் ஈடுபட்டதால் அந்த வழியாக வந்த வாகனங்கள் நெரிசலில் சிக்கி போக்குவரத்து ஸ்தம்பித்தது.

    நீண்ட தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பக்தர்களிடையே சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்கினால் மட்டுமே மறியலை கைவிடுவோம் என கூறி பக்தர்கள் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட பக்தர்களை போலீசார் அப்புறப்படுத்தி ஸ்ரீனிவாசம் விடுதி வளாகத்திற்குள் அனுப்பி வைத்து விடுதி கேட்டை மூடினர்.

    இருப்பினும் பக்தர்கள் இலவச தரிசன டிக்கெட்டுகளை வழங்கக்கோரி தொடர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இலவச தரிசன டிக்கெட்டுகளை வழங்கக்கோரி பக்தர்கள் மறியலில் ஈடுபட்ட சம்பவம் திருப்பதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×