search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மந்திரி ஹர்தீப் சிங் பூரி
    X
    மந்திரி ஹர்தீப் சிங் பூரி

    பெட்ரோல் விலை குறையாததற்கு மாநில அரசுகளே காரணம் - ஹர்தீப் சிங் பூரி

    பெட்ரோலை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டுவர மாநிலங்கள் விரும்பாததால்தான் அதன் விலை குறையவில்லை என மத்திய பெட்ரோலியத் துறை மந்திரி தெரிவித்தார்.
    கொல்கத்தா:

    மேற்கு வங்காள மாநிலம் பவானிபூர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் முதல் மந்திரி மம்தா பானர்ஜி போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து களமிறங்கும் பா.ஜ.க. வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக பெட்ரோலியத்துறை மந்திரி ஹர்தீப்சிங் பூரி, கொல்கத்தா சென்றார். அங்கு ஒரு செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் ஹர்தீப்சிங் பூரி கூறியதாவது:

    மேற்கு வங்காள அரசு அதிக வரி விதிப்பதால் இங்கு பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.100-ஐ தாண்டிவிட்டது. பெட்ரோல் விலை குறைய விரும்புகிறீர்களா என்று கேட்டால், நான் ‘ஆமாம்’ என்றுதான் சொல்வேன். பிறகு ஏன் விலை குறையவில்லை? என்று கேட்டால், பெட்ரோலை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டுவர மாநிலங்கள் விரும்பாததுதான் அதற்கு காரணம் என்று சொல்வேன்.

    பெட்ரோல் மீது லிட்டருக்கு 32 ரூபாய் மட்டுமே மத்திய அரசு வரியாக வசூலிக்கிறது. கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 19 டாலராக இருந்தபோதும், ரூ.32 வசூலித்தோம். பீப்பாய்க்கு 75 டாலராக உயர்ந்த பிறகும் அதே ரூ.32 மட்டுமே வசூலிக்கிறோம். இந்த 32 ரூபாயில்தான் இலவச ரேஷன் பொருட்கள், இலவச வீடு, இலவச சமையல் கியாஸ் இணைப்பு உள்ளிட்ட திட்டங்களை வழங்கி வருகிறோம். மேற்கு வங்காள மாநில அரசு கடந்த ஜூலை மாதம் பெட்ரோல் விலையை ரூ.3.51 உயர்த்தியது. இல்லாவிட்டால், விலை லிட்டருக்கு ரூ.100-க்கு கீழ்தான் இருக்கும். மேற்கு வங்காளத்தில் பெட்ரோல் மீதான மொத்த வரிவிதிப்பு 40 சதவீதமாக உள்ளது.

    பவானிபூர் இடைத்தேர்தல் முடிவு ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டதுதான் என்று திரிணாமுல் காங்கிரஸ் கூறுகிறது. பிறகு ஏன் ஒட்டுமொத்த மந்திரிசபையும் இங்கு பிரசாரம் செய்து வருகிறது? இந்த தொகுதியில் பா.ஜ.க. வெற்றி உறுதி. ஆனால், தேர்தலுக்கு பிந்தைய வன்முறை பற்றித்தான் கவலையாக இருக்கிறது என தெரிவித்தார்.

    Next Story
    ×