search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இளம்ஜோடி
    X
    இளம்ஜோடி

    ஓடிப்போன இளம்ஜோடிக்கு நூதன தண்டனை வழங்கிய கிராம மக்கள்

    மத்திய பிரதேச மாநிலம் தார் மாவட்டம் குந்தி கிராமத்தில் ஓடிப்போன இளம்ஜோடிக்கு கிராம மக்கள் நூதன தண்டனை வழங்கிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.
    போபால் :

    மத்திய பிரதேச மாநிலம் தார் மாவட்டம் குந்தி கிராமத்தை சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவர் கடந்த ஜூலை மாதம் காணாமல் போனார். அதுதொடர்பாக அவருடைய பெற்றோர் போலீசில் புகார் கொடுத்தனர்.

    அவர் அதே கிராமத்தை சேர்ந்த 21 வயது வாலிபருடன் ஓடிப்போனது தெரிய வந்தது. அவர்கள் ஓடிப்போக 13 வயது சிறுமி உதவியது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால், கிராம மக்கள் ஆத்திரத்துடன் அவர்களின் வருகைக்காக காத்திருந்தனர். ஓடிப்போன இருவரும் குஜராத் மாநிலத்துக்கு சென்று வசித்தனர். இதற்கிடையே, சில நாட்களுக்கு முன்பு இருவரும் தங்கள் கிராமத்துக்கு திரும்பினர்.

    அவர்களை பிடித்த கிராம மக்கள், ஓடிப்போனதற்கு தண்டனையாக, நடுரோட்டில் அவர்களது கழுத்தில் மோட்டார் சைக்கிள் டயரை போட்டு, அவர்களை ஆட வைத்தனர். அவர்களும் வேறுவழியின்றி கழுத்தில் டயருடன் நடனம் ஆடினர். அவர்களுக்கு உதவிய 13 வயது சிறுமிக்கும் அதே தண்டனை அளிக்கப்பட்டது.

    அப்போது, ஒரு நபர் அவர்களை பிரம்பால் அடித்தபடி இருந்தார். இந்த காட்சியை மற்றொருவர் வீடியோ எடுத்தார். இந்த வீடியோ, சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதையடுத்து, தார் போலீசார், 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். அவர்களில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். மீதி 2 பேரை தேடி வருகின்றனர்.
    Next Story
    ×