search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமரீந்தர் சிங்
    X
    அமரீந்தர் சிங்

    பஞ்சாப் காங்கிரசில் உச்சகட்ட மோதல்- முதல்வர் அமரீந்தர் சிங் ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல்

    இனியும் அவமானங்களைத் தாங்கிக் கொண்டு கட்சியில் நீடிக்க முடியாது என்று அமரீந்தர் திட்டவட்டமாக தெரிவித்ததாக கூறப்படுகிறது.
    சண்டிகர்:

    பஞ்சாப் மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஆளும் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி பூசல் நீடிக்கிறது. முதல்வர் அமரீந்தர் சிங்கிற்கும் கட்சியின் மூத்த தலைவர் சித்துவுக்கும் இடையே நீண்ட காலமாக கருத்து வேறுபாடு உள்ளது. தொடர் மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்விதமாக , கட்சியின் மாநிலத் தலைவராக சித்து நியமிக்கப்பட்டார்.

    எனினும், முதல்வர் அமரீந்தரை தனிப்பட்ட முறையில் விமர்சித்த சித்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஒரு தரப்பினர் பிடிவாதமாக இருந்தனர். அமரீந்தருக்கு எதிராக சில அமைச்சர்கள் போர்க்கொடி தூக்கினர். தேர்தல் நெருங்கும் நிலையில், காங்கிரஸ் கட்சிக்குள் கருத்து வேறுபாடு விஸ்வரூபம் எடுப்பதால், முதல்வரை மாற்ற கட்சி தலைமை முடிவு செய்துள்ளது.

    இதற்காக இன்று மாலையில் சண்டிகரில் கட்சி எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற உள்ளது. அதற்கு முன்னதாக அமரீந்தர் சிங் தனது வீட்டில் ஆதரவு எம்எல்ஏக்களுடன் ஆலோசனை நடத்தினார். இதில் 12 எம்எல்ஏக்கள் பங்கேற்றனர். 

    இதற்கிடையே, அமரீந்தர் சிங் முதல்வர் பதவியை ராஜினாமா  செய்யலாம் என தகவல் வெளியாகி உள்ளது. முதல்வர் பதவியில் இருந்து தன்னை நீக்கினால் கட்சியில் இருந்து விலகுவதாக  ஏற்கனவே கூறியிருந்தார். தற்போது அழுத்தம் அதிகரித்திருப்பதால் அவர் கட்சியில் இருந்து வெளியேற வாய்ப்பு உள்ளது. இதனால் பஞ்சாப் அரசியலில் பரபரப்பான சூழல் காணப்படுகிறது.

    ராஜினாமா குறித்து கட்சி தலைவர் சோனியா காந்தியிடம் அமரீந்தர் சிங்பேசியதாகவும், அப்போது, இனியும் அவமானங்களைத் தாங்கிக் கொண்டு கட்சியில் நீடிக்க முடியாது என்று  திட்டவட்டமாக தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

    அதேசமயம் கட்சியில் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடுகளை போக்கி, அமரீந்தர் சிங்கை சமாதானம் செய்யவும் காங்கிரஸ் தலைமை முயற்சி செய்துவருகிறது. 

    அமரீந்தர் சிங் ராஜினாமா செய்தால், பஞ்சாப் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சுனில் ஜாக்கர் முதல்வராக தேர்வு செய்யப்பட வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.
    Next Story
    ×