search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பேரணி நடத்துவதற்காக திரண்ட தொண்டர்கள்
    X
    பேரணி நடத்துவதற்காக திரண்ட தொண்டர்கள்

    தடையை மீறி பேரணி நடத்த திரண்ட சிரோமணி அகாலி தளம் தொண்டர்கள்- டெல்லியில் பரபரப்பு

    ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருப்பதால் பாராளுமன்றத்தை நோக்கி பேரணி நடத்த அனுமதி கிடையாது என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாய சங்கத்தினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய பாஜக அரசுக்கு தொடர்ந்து எதிர்ப்புகளை தெரிவித்தவண்ணம் உள்ளனர். வேளாண் சட்டங்களை திரும்ப பெறும் வரை போராட்டம் தொடரும் என டெல்லி எல்லைகளில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

    வேளாண் மசோதாக்களை பா.ஜ.க. கூட்டணியில் அங்கம் வகித்த சிரோமணி அகாலி தளம் கட்சி ஆரம்பம் முதலே எதிர்த்தது. பாஜக  அமைச்சரவையில் அங்கம் வகித்த சிரோமணி அகாலி தளம் கட்சியின் ஒரே உறுப்பினரான ஹர்சிம்ரத் கவுர் பாதல் பதவி விலகினார். அதன்பிறகு சிரோமணி அகாலி தளம், மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது. 

    இந்நிலையில், விவசாய மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு ஒரு வருடம் ஆனதை குறிக்கும் வகையில், இன்றைய தினத்தைக் கருப்பு தினமாக அனுசரித்து சிரோமணி அகாலி தளம் சார்பில் பேரணி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. 

    தலைநகர் டெல்லியில் உள்ள ஸ்ரீ ராகப் கஞ்ச் சாகிப் குருத்வாராவில் இருந்து பாராளுமன்றம் வரை கட்சியின் மூத்த தலைவர்கள் சுக்பீர் சிங் பாதல் மற்றும் ஹர்சிம்ரத் கவுர் தலைமையில் இந்தப் பேரணி நடத்த முடிவு செய்யப்பட்டது. 

    பாதுகாப்பு படையினர்

    சிரோமணி அகாலி தளம் கட்சியின் பேரணி அறிவிப்பை அடுத்து, டெல்லி மற்றும் டெல்லி எல்லைகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. எல்லைகள் சீல் வைக்கப்பட்டு பஞ்சாப் வாகனங்கள் எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டதாகவும், சிரோமணி அகாலி தளம் தெரிவித்துள்ளது. எனினும் அமைதியான முறையில் பேரணி நடத்தி, கோரிக்கை தொடர்பான மனு அளிக்கப்படும் என்றும் கூறி உள்ளது.

    கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருப்பதால்  பாராளுமன்றத்தை நோக்கி பேரணி நடத்த அனுமதி கிடையாது என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுடெல்லியில் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

    எனினும், சிரோமணி அகாலி தளம் கட்சியைச் சேர்ந்த சிலர் பேரணி நடத்துவதற்காக இன்று காலையில் ஒன்றுகூடினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை முன்னேறி செல்ல விடாமல் போலீசார் தடுத்து வைத்தனர். மேலும், பேரணிக்கு அனுமதி இல்லாததால் அமைதியாக கலைந்துசெல்லும்படி கூறினர்.

    போராட்டத்திற்கு அனுமதி கிடையாது என்பதை சிரோமணி அகாலி தளம் தலைவர்களிடம் தெளிவாக கூறிவிட்டதாகவும் துணை கமிஷனர் தீபக் யாதவ் கூறினார். 

    Next Story
    ×