search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரியங்கா காந்தி
    X
    பிரியங்கா காந்தி

    உத்தரபிரதேசத்தில் பிரியங்கா 2-ந்தேதி முதல் தேர்தல் பிரசாரம்

    உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி பெரிய கட்சிகளுடன் கூட்டணி அமைக்கவில்லை. சிறிய கட்சிகள் பலவற்றுடன் கூட்டணி அமைப்பதற்கு பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளது.

    லக்னோ:

    உத்தரபிரதேசத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. அங்கு தற்போது பாரதிய ஜனதா ஆட்சி நடைபெறுகிறது. மீண்டும் ஆட்சியை கைப்பற்ற பாரதிய ஜனதா தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

    நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தில் தேர்தல் முடிவுகள் பாராளுமன்ற தேர்தலிலும் எதிரொலிக்கும் என்ற அடிப்படையில் இங்கு எப்படியாவது ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்று பாரதிய ஜனதா நினைக்கிறது.

    உத்தரபிரதேசத்தில் ஒரு காலத்தில் காங்கிரஸ் அசைக்க முடியாத சக்தியாக இருந்தது. அதன்பிறகு பிராந்திய கட்சிகள் செல்வாக்கு பெறத்தொடங்கின.

    இதன்காரணமாக ஜனதாதளம், சமாஜ் வாடி, பகுஜன்சமாஜ் போன்ற கட்சிகள் ஆட்சிக்கு வந்தன. இதனால் காங்கிரஸ் கட்சி 4-வது இடத்துக்கு தள்ளப்பட்டது.

    கடந்த சட்டசபை தேர்தலில் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சியிடம் காங்கிரஸ் கூட்டணி வைத்து போட்டியிட்டது. ஆனால் படுதோல்வியை சந்தித்தது. காங்கிரஸ் கட்சியால் 7 இடங்களில் மட்டுமே வெற்றிபெற முடிந்தது.

    இதன்பின்னர் இரு கட்சிகளின் கூட்டணியும் உடைந்தது. பாராளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்டார்கள். அப்போது சோனியா போட்டியிட்ட ரேபரேலி தொகுதியில் மட்டும் வெற்றி கிடைத்தது.

    ராகுல் காந்தி அமேதி தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இந்த மாநிலத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் நிலை நிறுத்தும் வகையில் பிரியங்காவை காங்கிரஸ் களம் இறக்கியுள்ளது.

    ராகுல் காந்தி

    அவருக்கு பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டு இருப்பதுடன் உத்தர பிரதேசமாநில மேலிட பொறுப்பாளர் பதவியும் வழங்கப்பட்டு இருக்கிறது. அவர் நீண்டகாலமாக உத்தர பிரதேசத்தில் தனிக்கவனம் செலுத்தி கட்சி பணிகளை செய்து வருகிறார். அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தலுக்கான பணிகளை அனைத்து கட்சிகளுமே தொடங்கிவிட்டன.

    மஜ்லிஸ் கட்சியை சேர்ந்த ஓவைசி தேர்தல் பிரசாரத்தை ஏற்கனவே தொடங்கிவிட்டார். பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி நேற்று முன்தினம் தனது பிரசாரத்தை தொடங்கினார். பாரதிய ஜனதா ஆரம்ப கட்ட பணிகளை தீவிரமாக செய்து வருகிறது.

    பிரியங்கா வருகிற 2-ந் தேதி முதல் அங்கு பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார். அங்கு லக்னோவில் மிகப்பெரிய பொதுக்கூட்டம் ஒன்று நடத்தப்படுகிறது. அதில் பிரியங்கா பங்கேற்கிறார். அதைத்தொடர்ந்து மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பிரசார பணிகளை மேற்கொள்கிறார்.

    செப்டம்பர் 10 மற்றும் 11-ந்தேதி மீண்டும் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அப்போது கட்சி தலைவர்கள், தேர்தல் பணியாளர்கள், ஆலோசனை கமிட்டி உறுப்பினர்கள் உள்ளிட்டவர்களுடன் கலந்தாலோசனை கூட்டங்களை நடத்துகிறார்.

    உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி பெரிய கட்சிகளுடன் கூட்டணி அமைக்கவில்லை. சிறிய கட்சிகள் பலவற்றுடன் கூட்டணி அமைப்பதற்கு பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளது.

    இதையும் படியுங்கள்...குருவாயூர் கோவிலுக்கு மரகத கிரீடம் காணிக்கை- வெளிநாடு வாழ் பக்தர் வழங்கினார்

    Next Story
    ×