search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மத்திய அரசு
    X
    மத்திய அரசு

    கோதுமைக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை ரூ.40 உயர்வு- மத்திய அரசு நடவடிக்கை

    குறுவை பயிர்களான மசூர் பருப்புக்கு குவிண்டாலுக்கு ரூ.400 அதிகரிக்கப்பட்டு உள்ளது. பருப்புக்கு ரூ.130-ம், குங்குமப்பூ என்றால் ரூ.114-ம் உயர்த்தப்பட்டு இருக்கிறது.
    புதுடெல்லி:

    விவசாயிகளின் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயித்து மத்திய அரசு கொள்முதல் செய்து வருகிறது. அந்தவகையில் சம்பா மற்றும் குறுவை பருவங்களில் 23 பயிர்களுக்கு தற்போது மத்திய அரசு குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயித்து வருகிறது.

    குறுவையை பொறுத்தவரை கோதுமை மற்றும் கடுகு போன்றவை முக்கியமான பயிர்களாகும். இந்த பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை மத்திய அரசு உயர்த்தி இருக்கிறது.

    பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடந்த பொருளாதார விவகாரங்களுக்கான கேபினட் கமிட்டி கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டு இருக்கிறது.

    இதில் நடப்பு (2021-22) பயிர் ஆண்டு மற்றும் 2022-23 சந்தை பருவங்களுக்கான 6 குறுவை பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்த ஒப்புதல் அளிக்கப்பட்டது.

    இதில் முக்கியமாக கோதுமைக்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.40 உயர்த்தப்பட்டு உள்ளது. இதன் மூலம் குவிண்டால் ஒன்றின் குறைந்தபட்ச ஆதரவு விலை ரூ.1,975-ல் இருந்து ரூ.2,015 ஆக உயர்ந்திருக்கிறது.

    இதன் மூலம் கோதுமையின் உற்பத்தி செலவு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.1,008 ஆக மதிப்பிடப்பட்டு உள்ளதாக மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

    கோதுமை


    2021-22 குறுவை சந்தை பருவத்தில் சாதனை அளவாக 4.3 கோடி டன்களுக்கு மேல் கோதுமை கொள்முதல் செய்யப்பட்டு உள்ளதாக அரசு கூறியுள்ளது.

    இதைப்போல கடுகு விதைக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையும் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.400 உயர்த்தப்பட்டு, ரூ.5,050 ஆக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

    இந்த தகவல்கள் அனைத்தும் பொருளாதார விவகாரங்களுக்கான கேபினட் கமிட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

    இதைப்போல மற்ற குறுவை பயிர்களான மசூர் பருப்புக்கு குவிண்டாலுக்கு ரூ.400 அதிகரிக்கப்பட்டு உள்ளது. பருப்புக்கு ரூ.130-ம், குங்குமப்பூ என்றால் ரூ.114-ம் உயர்த்தப்பட்டு இருக்கிறது.

    பலவகை பயிர்களும் விளைவிப்பதை ஊக்குவிக்கவே இந்த வேறுபட்ட விலை நிர்ணயத்துக்கான காரணமாக அரசு வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

    குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்வால், கோதுமை, எண்ணெய் வித்துக்கள், கடுகு விவசாயிகளுக்கு உற்பத்தி விலையை விட 100 சதவீத லாபம், பருப்பு வகைகளுக்கு 74 முதல் 79 சதவீத லாபம், பார்லிக்கு 60 சதவீத லாபம், குங்குமப்பூவுக்கு 50 சதவீத லாபம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையும் படியுங்கள்... உலக அளவில் கொரோனா பரவல் மந்தம்
    Next Story
    ×