search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சினிமா பாடலாசிரியர் ஜாவேத் அக்தர்
    X
    சினிமா பாடலாசிரியர் ஜாவேத் அக்தர்

    சர்ச்சை கருத்து: சினிமா பாடலாசிரியர் ஜாவேத் அக்தருக்கு பாஜக, சிவசேனா கண்டனம்

    ஜாவேத் அக்தர் தனது கருத்துக்காக ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகளிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். அதுவரை அவர் பணியாற்றி உள்ள எந்த சினிமா படத்தையும் நாட்டில் திரையிட அனுமதிக்க கூடாது
    மும்பை :

    இந்தி சினிமா பாடலாசிரியர் மற்றும் உருது கவிஞராக விளங்குபவர் ஜாவேத் அக்தர். இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பையும், தலீபான்களையும் ஒப்பிட்டு கூறிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இதில் அவர், “உலகெங்கிலும் உள்ள வலதுசாரிகள் விசித்திர ஒற்றுமையை கொண்டுள்ளனர். தலீபான்கள் இஸ்லாமிய நாட்டை உருவாக்க விரும்புகிறார்கள். இதேபோல் இங்கு உள்ளவர்கள் இந்து தேசத்தை உருவாக்க விரும்புகிறார்கள் என்றார்.

    ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பெயரை குறிப்பிடாமல் ஜாவேத் அக்தர் இந்த கருத்தை கூறியிருந்தாலும் அவருக்கு பா.ஜனதா மற்றும் மராட்டியத்தில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரசுடன் சேர்ந்து கூட்டணி ஆட்சியை அமைத்துள்ள சிவசேனாவும் கண்டனம் தெரிவித்துள்ளன.

    இது தொடர்பாக மராட்டிய பா.ஜனதா செய்தி தொடர்பாளர் ராம் கதம் எம்.எல்.ஏ. கூறுகையில், ‘ஜாவேத் அக்தர் தனது கருத்துக்காக ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகளிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். அதுவரை அவர் பணியாற்றி உள்ள எந்த சினிமா படத்தையும் நாட்டில் திரையிட அனுமதிக்க கூடாது’ என்று வலியுறுத்தினார்.

    சிவசேனா தனது கட்சியின் பத்திரிகையான ‘சாம்னா'வில் கூறியிருப்பதாவது:-

    ஜாவேத் அக்தர் மதச்சார்பற்ற மனிதராக இருந்தாலும், அடிப்படைவாதத்திற்கு எதிராக பேசினாலும், அவர் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை தலீபான்களுடன் ஒப்பிடுவது முற்றிலும் தவறு. இந்து தேசத்தை கோருபவர்கள் மிதவாதிகள். பாகிஸ்தான் உருவாவதற்கு வழிவகுத்த பிரிவினை மதத்தை அடிப்படையாகக் கொண்டது.

    இந்துத்வா ஆதரவாளர்கள் நாட்டில் பெரும்பான்மையினராக உள்ள இந்துக்களை ஓரங்கட்டிவிடக்கூடாது என்று மட்டுமே விரும்புகிறார்கள். இந்துத்வா என்பது ஒரு கலாசாரம். இதன் மீது தாக்குதல் நடத்துபவர்களை தடுக்கவே உரிமை கோருகின்றனர். தலீபான்களுடன் இந்துத்வாவை ஒப்பிடுவது இந்து கலாசாரத்தின் அவமதிப்பாகும்.

    இந்துக்கள் பெரும்பான்மையினராக உள்ள நாடாக இருந்தாலும், நாங்கள் மதச்சார்பின்மையின் கொடியை உயர்த்தியுள்ளோம். நீங்கள் ஆர்.எஸ்.எஸ். உடன் கருத்து வேறுபாடுகளை கொண்டிருக்கலாம். ஆனால் அவர்களின் தத்துவத்தை தலீபானி என்று சொல்வது முற்றிலும் தவறு.

    ஜாவேத் அக்தரின் சர்ச்சை கருத்தை அடுத்து மும்பை ஜூகு பகுதியில் இஸ்கான் கோவிலுக்கு அருகில் உள்ள அவரது வீட்டு முன் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளர். பெண் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
    Next Story
    ×