search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நிபா வைரஸ்
    X
    நிபா வைரஸ்

    நிபா வைரஸ் காய்ச்சலுக்கு 12 வயது சிறுவன் பலி

    கேரளாவில் இருந்து வருவோர் அனைவரும் களியக்காவிளை எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டு சோதனைக்கு பிறகே மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

    திருவனந்தபுரம்:

    உலகை உலுக்கும் கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவில் முதலில் கேரள மாநிலத்தில் தான் கண்டறியப்பட்டது.

    கொரோனாவின் முதல் அலையை திறமையாக கட்டுப்படுத்திய கேரள மாநிலம், அதன் 2-வது அலை வீச்சை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகிறது.

    இந்தியாவின் ஒட்டுமொத்த தினசரி கொரோனா பாதிப்பில் 70 சதவீதத்திற்கும் அதிகமான நோயாளிகள் கேரளாவில் கண்டறியப்பட்டுள்ளனர். நேற்றும் இங்கு 29, 862 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    கொரோனா தொற்று குறையாத நிலையில் இப்போது அங்கு நிபா வைரஸ் காய்ச்சலும் பரவி பீதியை கிளப்பி உள்ளது. நிபா வைரஸ் வவ்வால்கள் மூலம் பரவுவதாக கண்டறியப்பட்டு உள்ளது.

    கடந்த 2018-ம் ஆண்டு மே 19-ந் தேதி கோழிக்கோடு மாவட்டத்தில் நிபா வைரஸ் நோய் இருப்பதை சுகாதார துறையினர் கண்டுபிடித்தனர். மே மாதம் முதல் ஜூன் மாதம் வரை இந்நோயின் தாக்கம் அதிகமாக இருந்தது. அப்போது இந்நோய்க்கு 17 பேர் பலியானார்கள். 18 பேர் பாதிப்புக்கு ஆளாகி இருந்தனர்.

     அதன்பின்பு மாநில சுகாதார துறையினர் எடுத்த தடுப்பு நடவடிக்கை மூலம் நோய் கட்டுக்குள் வந்தது. அதன்பின்பு சுகாதார துறையின் கவனம் கொரோனா வைரஸ் தாக்கத்தை தடுப்பதில் திரும்பியது.

    இந்த நிலையில் கோழிக்கோடு மாவட்டத்தில் தற்போது நிபா வைரஸ் காய்ச்சல் மீண்டும் பரவ தொடங்கி உள்ளது. இந்நோய்க்கு இன்று 12 வயது சிறுவன் ஒருவன் பலியாகி உள்ளார். இதனை கேரள சுகாதார மந்திரி வீணா ஜார்ஜ் இன்று உறுதி செய்தார். அவர் கூறியதாவது:-

    கொரோனா தடுப்பூசி

    கோழிக்கோடு பகுதியில் கடந்த 5 நாட்களுக்கு முன்பு 12 வயது சிறுவன் ஒருவனுக்கு காய்ச்சல் ஏற்பட்டது. பெற்றோர் அவரை அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்ற சிறுவனுக்கு நோய் பாதிப்பு அதிகரித்தது. இதையடுத்து சிறுவனின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பூனாவில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டது. அங்கு சிறுவனுக்கு நிபா வைரஸ் காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

    இதையடுத்து அந்த சிறுவன் கோழிக்கோடு அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இன்று அதிகாலை 5 மணிக்கு அந்த சிறுவன் பரிதாபமாக இறந்தார்.

    நிபா வைரஸ் காய்ச்சலுக்கு பலியான சிறுவனுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து உடனடியாக அவர்களை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. தற்போது வரை சிறுவனின் உறவினர்கள் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை என்பது தெரியவந்துள்ளது.

    மேலும் நிபா வைரஸ் அண்டை மாவட்டமான மலப்புரத்தில் பரவாமல் இருக்க தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு ள்ளன. எனவே மக்கள் அச்சப்பட வேண்டாம். சுகாதார துறையின் அறிவுரைகளை மக்கள் முழுமையாக பின்பற்ற வேண்டும். இதன்மூலம் நோய் பரவலை கட்டுப்படுத்தலாம், என்றார்.

    கேரளாவில் நிபா வைரஸ் காய்ச்சல் பரவி உள்ளது பற்றிய தகவல் மத்திய சுகாதார துறை அதிகாரிகளுக்கும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மத்திய சுகாதார துறையின் தேசிய நோய்தடுப்பு ஆலோசனை குழுவை கேரளா அனுப்பி வைத்துள்ளனர்.

    இக்குழுவில் இடம் பெற்றுள்ளவர்கள் கேரளாவிற்கு சென்று நோய் பாதித்த பகுதிகளில் இன்று நேரில் ஆய்வு செய்கிறார்கள். மேலும் அங்கு நோய் பரவாமால் இருக்க மேற்கொள்ள வேண்டிய தொழில்நுட்ப ஆலோசனைகளையும் மாநில சுகாதார துறையினருக்கு வழங்குகிறார்கள். மேலும் நோயை கட்டுப்படுத்துவதற்கான திட்டங்களை தயாரித்து அதனை அமல்படுத்துவதற்கான ஏற்பாடுகளையும் மேற்கொள்கிறார்கள்.

    கேரளாவில் கொரோனா தொற்று அதிகரிப்பு மற்றும் நிபா வைரஸ் பரவலை தொடர்ந்து கேரள எல்லையில் உள்ள குமரி மாவட்டத்திலும் உஷார் நடவடிக்கைகளை குமரி மாவட்ட நிர்வாகம் எடுத்துள்ளது.

    கேரளாவில் இருந்து வருவோர் அனைவரும் களியக்காவிளை எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டு சோதனைக்கு பிறகே மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

    மேலும் 2 டோஸ் தடுப்பூசி போட்டு கொண்ட சான்றிதழ், ஆர்.டி.பி.சி.ஆர். சோதனை மேற்கொண்டதற்கான ஆவணங்கள் இருந்தால் மட்டுமே மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்படுகிறார்கள். இதற்காக எல்லையில் சுகாதார துறையின் சிறப்பு குழு நியமிக்கப்பட்டு உள்ளது.

    இதையும் படியுங்கள்... பிரம்படி வாங்கியதை மறக்க முடியாது- நாராயணசாமி

    Next Story
    ×