search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திரிணாமுல் காங்கிரசில் இணைந்த பாஜக எம்எல்ஏ சோமன் ராய்
    X
    திரிணாமுல் காங்கிரசில் இணைந்த பாஜக எம்எல்ஏ சோமன் ராய்

    மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரசில் இணைந்த பாஜக எம்எல்ஏ

    காலியாகஞ்ச் தொகுதியின் பாஜக எம்எல்ஏ சோமன் ராய் கட்சி மாறியதால், மேற்கு வங்காள சட்டசபையில் பாஜகவின் பலம் 71 ஆக குறைந்துள்ளது.
    கொல்கத்தா:

    மேற்கு வங்காளத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றிபெற்று 3-வது முறையாக ஆட்சியை கைப்பற்றியது. மம்தா பானர்ஜி முதல் மந்திரியாக பொறுப்பேற்றார். தேர்தலுக்கு முன்பு, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து அதிருப்தி தலைவர்கள் பாஜகவில் சேர்ந்தனர். தற்போது அவர்களில் பலர் திரிணாமுல் காங்கிரசுக்கு திரும்பி உள்ளனர்.

    அவ்வகையில், காலியாகஞ்ச் தொகுதியின் பாஜக எம்எல்ஏ சோமன் ராய் இன்று திரிணாமுல் காங்கிரசில் இணைந்தார். மாநில அமைச்சரும் கட்சியின் மூத்த தலைவருமான பார்த்தா சாட்டர்ஜி முன்னிலையில் திரிணாமுல் காங்கிரசில் சேர்ந்தார். அவரை கட்சி நிர்வாகிகள் வரவேற்று வாழ்த்தினர். 

    சோமன் ராய்

    பின்னர் பேசிய சோமன் ராய், “சில தவிர்க்க முடியாத சூழ்நிலைகள் காரணமாக நான் பாஜக சார்பில் காலியாகஞ்சில் போட்டியிட வேண்டியிருந்தது. ஆனால் என் ஆன்மாவும் இதயமும் திரிணாமுல் காங்கிரசுக்கு சொந்தமானது. எனவே, முதல்வர் மம்தா பானர்ஜியின் முயற்சிகளை ஆதரிக்க நான் மீண்டும் கட்சியில் சேர்ந்தேன். நான் இங்கு இல்லாத நாட்களுக்காக கட்சி தலைமையிடம் மன்னிப்பு கேட்கிறேன்” என்றார்.

    பாஜக எம்எல்ஏ சோமன் ராய், வங்காளத்தின் வளர்ச்சிக்காக மீண்டும் தங்களுடன் இணைந்திருப்பதாக திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் பார்த்தா சாட்டர்ஜி கூறினார். 

    எம்எல்ஏ சோமன் ராய் கட்சி மாறியதால், மேற்கு வங்காள சட்டசபையில் பாஜகவின் பலம் 71 ஆக குறைந்துள்ளது. கடந்த 4 வாரங்களில் மட்டும் பாஜகவில் இருந்து 4 எம்எல்ஏக்கள் திரிணாமுல் காங்கிரசில் இணைந்துள்ளனர்.

    மேற்கு வங்காளத்தில் உள்ள பவானிபூர், சம்சர்கஞ்ச், ஜாங்கிபூர் ஆகிய 3 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வருகிற 30-ந் தேதி நடக்க உள்ள நிலையில், பாஜக எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து வெளியேறுவது கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×