search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    3 வயது குழந்தையுடன் காரை பறிமுதல் செய்த போலீசார்
    X
    3 வயது குழந்தையுடன் காரை பறிமுதல் செய்த போலீசார்

    அதிவேகமாக சென்றதாக அபராதம்- 3 வயது குழந்தையுடன் காரை பறிமுதல் செய்த போலீசார்

    திருவனந்தபுரம் பாலராமபுரம் பகுதியில் வாகன சோதனையின் போது 3 வயது குழந்தையுடன் காரை போலீசார் பறிமுதல் செய்த காட்சி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் போக்குவரத்து போலீசாருக்கும் வாகன ஓட்டிகளுக்கும் அடிக்கடி மோதல் நடைபெற்று வருகிறது.

    திருவனந்தபுரம்  அருகே ஆற்றிங்கல் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார் 8 வயது சிறுமி மீது செல்போன் திருடியதாக  குற்றம்  சாட்டி போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர். பின்னர் அந்த புகார் தவறு என அறிந்து சிறுமியை விடுவித்தனர். இந்த சம்பவம் குறித்து குழந்தைகள் நல ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.

    இந்தநிலையில் திருவனந்தபுரம் பாலராமபுரம் பகுதியில் 3 வயது குழந்தையுடன் காரை பறிமுதல் செய்த சம்பவம் இப்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதன்விபரம் வருமாறு:-

    திருவனந்தபுரம் அருகே பாலராமபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சிவகுமார். அவரது மனைவி அஞ்சனா. இவர்கள் அப்பகுதியில் இசைப்பள்ளி ஒன்றை நடத்தி வருகின்றனர். சம்பவத்தன்று சிவகுமார் தனது காரில் மனைவி அஞ்சனா மற்றும் மூன்று வயது குழந்தையுடன் திருவனந்தபுரம்-கன்னியாகுமரி நெடுஞ்சாலையில் காரில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார் காரை தடுத்து நிறுத்தினர். அவரிடம்  அதிக வேகத்தில் காரை ஓட்டியதாகவும் இந்தப் பகுதியில் மணிக்கு 30 கிலோ மீட்டர் வேகத்தில் தான் காரை ஓட்ட வேண்டும் என்றும் கூறி சாலை விதியை மீறியதால் ரூ.1800 அபராதம் விதித்தனர். ஆனால் சிவகுமார் அபராதம் செலுத்த மறுத்தார்.

    மற்ற வாகனங்களுக்கு அபராதம் விதிக்காத நிலையில்  தனக்கு மட்டும் அபராதம் விதித்தது ஏன்? என்று கேட்டு  வாக்குவாதம் செய்தார். இதனால் போலீசாருக்கும் அவருக்கும் வாக்குவாதம் முற்றியது.

    இதனால் ஆத்திரமடைந்த போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ்குமார் சிவக்குமாரின் காரை பறிமுதல் செய்தார். மேலும் காரில் இருந்த அவரின் மூன்று வயது மகளையும் காருக்குள் வைத்து பூட்டி சென்றார். பெற்றோரை காரில் இருந்து இறக்கிவிட்டு போலீசார் காரை இழுத்து சென்றதால், காரில் இருந்த குழந்தை கதறி அழுதது. இதனை பார்த்து அக்கம் பக்கத்தினர் திரண்டனர். அவர்கள் போலீசாரின் செயலை கண்டித்தனர்.

    இந்த சம்பவத்தை சிலர் செல்போனில் பதிவு செய்தனர். இந்த காட்சிகளை சிவகுமார் சமூக வலைதளங்களில் பதிவிட்டார். இது சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. வீடியோவை பார்த்தவர்கள்  இச்சம்பவத்திற்கு  உயர் அதிகாரிகள்  நடவடிக்கை எடுக்க வேண்டும் என கருத்து பதிவிட்டனர்.

    இதுதொடர்பாக நெய்யாற்றின்கரை டி.எஸ்.பி. கூறியதாவது:-

    இந்த சம்பவம் நடந்து பல நாட்கள் ஆகிவிட்டது. இதில்  ஈடுபட்ட சப்-இன்ஸ்பெக்டர் ஏற்கனவே கோழிக்கோடு மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவர் மீது துறை ரீதியான விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

    Next Story
    ×