search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிவசேனா
    X
    சிவசேனா

    நாராயண் ரானே மத்திய அரசுக்கு தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளார்: சிவசேனா

    யாராவது பிரதமரை பற்றி இப்படி பேசியிருந்தால் அவர் மீது தேசத்துரோக குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு இருக்கும். மத்திய மந்திரி நாராயண் ரானேவின் குற்றமும் அதுபோன்றது தான்.
    மும்பை :

    ராய்காட் மாவட்டத்தில் மக்கள் ஆசி யாத்திரை நடத்திய மத்திய மந்திரி நாராயண் ரானே முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவை கடுமையாக தாக்கி பேசினார்.

    அப்போது அவர், “முதல்-மந்திரிக்கு நாடு சுதந்திரம் பெற்று எத்தனை ஆண்டு ஆகி விட்டது என்பது கூட தெரியாமல் இருப்பது வெட்கக்கேடானது. சுதந்திர தின உரையின்போது ஆண்டை கணக்கிட்டு கூறுமாறு பின்னால் திரும்பி உதவியாளரிடம் கேட்கிறார். நான் அங்கு இருந்தால் அவரை ஓங்கி அறைந்திருப்பேன்” என கூறினார்.

    இந்த சர்ச்சை பேச்சு பூதாகரமாக வெடித்ததை தொடர்ந்து மத்திய மந்திரி நாராயண் ரானே கைது செய்யப்பட்டார்.

    இதுகுறித்து சிவசேனா கட்சி தனது அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னாவின் தலையங்கத்தில் நேற்று கூறியதாவது:-

    மத்திய மந்திரி நாராயண் ரானே தனது பேச்சுகள் மூலம் மத்திய அரசை வெட்கத்தில் தலைகுனிய வைத்துள்ளார். பிரதமர் மோடியும், அமித்ஷாவும் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே குறித்த நாராயண் ரானேவின் பேச்சை தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

    யாராவது பிரதமரை பற்றி இப்படி பேசியிருந்தால் அவர் மீது தேசத்துரோக குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு இருக்கும். மத்திய மந்திரி நாராயண் ரானேவின் குற்றமும் அதுபோன்றது தான்.

    மராட்டியம் சட்டப்படி இயக்கும் மாநிலம். இதுபோன்ற செயல்கள் குறிப்பிட்ட எல்லைக்கு மேல் பொறுத்துக்கொள்ள முடியாது. இதுபோன்ற செயல்களை பிரதமர் மோடி சகித்துக்கொள்ள மாட்டார். பா.ஜனதா இதற்கு பெரும் விலை கொடுக்க நேரிடும்.

    ஒரு முதல்-மந்திரியை அச்சுறுத்துபவர்கள் மீது சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்கப்படும். முந்தைய தேவேந்திர பட்னாவிஸ் ஆட்சி காலத்தில் பிரதமர் நரேந்திர மோடியை கொல்ல திட்டமிட்டதாக சில அறிவாளிகள் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.

    முதல்-மந்திரியை உடல்ரீதியாக தாக்குவதாக அச்சுறுத்துவது என்பது ஒன்றுப்பட்ட மராட்டிய இயக்கத்தின் 105 தியாகிகளின் உணர்வுகளை புண்படுத்துவது போன்றது. நாராயண் ரானே மராட்டியத்தை காயப்படுத்தி உள்ளார்.

    நாராயண் ரானே ஓட்டைகளுடன் கூடிய பலூன். பா.ஜனதா எவ்வளவு காற்றை நிரப்ப முயன்றாலும் அது ஒருபோதும் பெரிதாகாது. மத்திய மந்திரி பதவி வழங்கப்பட்டபோதும் அவர் சாலையோர ரவுடி போல நடந்துகொண்டு வருகிறார்.

    பா.ஜனதா கட்சியின் மாநில தலைவர்கள் தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் சந்திரகாந்த் பாட்டீல் அவருக்கு ஆதரவளித்து வருகின்றனர். எந்த ஒரு பண்பட்ட தலைவரும் மன்னிப்பு கேட்டு இந்த விவகாரத்தை முடித்திருப்பார். ஏனெனில் மாநிலத்திற்கு மேல் யாரும் இல்லை. ஆனால் பா.ஜனதாவுக்கு, மராட்டியத்தின் பெருமை மற்றும் முதல்-மந்திரியின் கவுரவம் முக்கியமற்றது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×