search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொல்லப்பட்ட பயங்கரவாதிகள்
    X
    கொல்லப்பட்ட பயங்கரவாதிகள்

    பாலிவுட் பாணியில் அதிரடி வேட்டை... லஷ்கர் இ தொய்பா அமைப்பின் முக்கிய பயங்கரவாதி சுட்டுக்கொலை

    இன்று நடந்த ஆபரேசன் மிகப்பெரிய வெற்றி என்றும், கொல்லப்பட்ட ஷேக் மற்றும் மன்சூர் ஆகிய இருவரும் பயங்கரவாதத்தை கட்டவிழ்த்துவிட்டவர்கள் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீரில் பதுங்கியிருந்து தாக்குதல் மற்றும் நாசவேலைகளில் ஈடுபடும் பயங்கரவாதிகளை ஒழிக்கும் பணியில் ராணுவம் மற்றும் காவல்துறை தீவிரம் காட்டி வருகிறது. அவ்வகையில் ஸ்ரீநகரில் இன்று பாலிவுட் பாணியில் நடந்த அதிரடி தேடுதல் வேட்டையின்போது, முக்கிய பங்கரவாதிகளில் ஒருவன் கொல்லப்பட்டுள்ளான்.

    ஸ்ரீநகரின் மையப்பகுதியான அலூச்சி பாக் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலையடுத்து 10 போலீசார் சாதாரண உடையில் அங்கு திடீரென சென்று சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தினர். இதில், லஷ்கர் இ தொய்பா அமைப்பின் உயர்மட்ட தலைவரான அப்பாஸ் ஷேக் மற்றும் அவனது கூட்டாளி சாகிப் மன்சூர் ஆகியோர் கொல்லப்பட்டனர். இருவரும் போலீசாரால் தேடப்பட்ட குற்றவாளிகள்.

    கொல்லப்பட்ட அப்பாஸ் ஷேக், லஷ்கர் இ தொய்பாவின் நிழல் அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் பிரண்டின் (டிஆர்எப்) தலைவராக செயல்பட்டதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். இன்று நடந்த ஆபரேசன் மிகப்பெரிய வெற்றி என்று காவல்துறை தெரிவித்துள்ளது. 

    ஷேக் மற்றும் மன்சூர் ஆகிய இருவரும் இப்பகுதியில் பயங்கரவாதத்தை கட்டவிழ்த்துவிட்டனர். பல கொலைகளைத் தவிர, இளைஞர்களை தங்கள் இயக்கத்தில் சேர்க்கும் பணியிலும் ஈடுபட்டனர். 46 வயதான ஷேக், ஆரம்பத்தில் ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பில் இருந்தான். அதன்பின்னர் லஷ்கர் இயக்கத்திற்கும், டிஆர்எப் இயக்கத்திற்கும் மாறினான். 

    மன்சூர், கடந்த ஆண்டு டிஆர்எப் அமைப்பில் சேர்ந்தபோது முதுகலை பட்டதாரி மாணவன். ஷேக்கின் உத்தரவின் பேரில் ஸ்ரீநகரிலும் அதைச் சுற்றியும் சில கொலைகளை செய்ததாக கூறப்படுகிறது. இதனால், இயக்கத்தில் மன்சூரின் செல்வாக்கு உயர்ந்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×