search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மனுக்கள் வாங்கும் முதல் மந்திரி பசவராஜ் பொம்மை
    X
    மனுக்கள் வாங்கும் முதல் மந்திரி பசவராஜ் பொம்மை

    ஊரடங்கு நேரத்தில் மனுக்களை வாங்கி விதிகளை மீறிய முதல் மந்திரி

    உப்பள்ளியில் முதல் மந்திரி பசவராஜ் பொம்மை ஊரடங்கு விதிகளை மீறி இரவு நேரத்தில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார்.
    பெங்களூரு:

    கர்நாடக முதல் மந்திரியாக இருந்த எடியூரப்பா தனது பதவியை ராஜினாமா செய்தார். அதையடுத்து முதல் மந்திரியாக பசவராஜ் பொம்மை பதவி ஏற்றுக் கொண்டார். முதல் மந்திரியாக பதவி ஏற்ற பிறகு முதல் முறையாக அவர் நேற்று தார்வார் மாவட்டம் உப்பள்ளிக்கு சென்றார்.

    உப்பள்ளிதான் பசவராஜ் பொம்மையின் சொந்த ஊராகும். நேற்று முன்தினம் இரவு உப்பள்ளி டவுன் ஆதர்சா நகரில் உள்ள தனது வீட்டில் அவர் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார்.

    அவர் வந்திருப்பது பற்றி அறிந்த பொதுமக்கள் அவரைக்காண வேண்டி அவருடைய வீட்டின் முன் திரண்டனர். ஏராளமானோர் திரண்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து வீட்டில் இருந்து வெளியே வந்த முதல் மந்திரி பசவராஜ் பொம்மை, அங்கு திரண்டிருந்த பொதுமக்களை பார்த்து கையசைத்தார். பின்னர் அவர்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். இந்த சந்தர்ப்பத்தில் அவரது பாதுகாவலர்கள் சிலர் நேரம் இரவு 9.30 மணி ஆகிவிட்டது என்பதை தெரிவித்தனர்.

    இதையடுத்து, பசவராஜ் பொம்மை உடனடியாக தனது கைக்கடிகாரத்தைப் பார்த்தார். மணி இரவு 9.30-ஐ தாண்டி இருந்தது. இதனால் அவர் உடனடியாக மனுக்கள் வாங்குவதை நிறுத்திவிட்டு அங்கிருந்து புறப்பட்டு இரவு உணவு சாப்பிடுவதற்காக ஒரு தனியார் ஓட்டலுக்கு சென்றுவிட்டார். இதனால் அங்கு திரண்டிருந்த ஏராளமானோர் ஏமாற்றம் அடைந்தனர்.

    ஓட்டலில் இருந்து வெளிவந்த பசவராஜ் பொம்மையிடம் நிருபர்கள் இரவு நேர ஊரடங்கு இரவு 9 மணிக்கு அமலுக்கு வந்த நிலையில் ஊரடங்கை மீறி நீங்களே இப்படி பொதுமக்கள் ஒரே இடத்தில் கூடி நிற்க அனுமதிக்கலாமா? என கேள்வி எழுப்பினர்.

    அதற்கு மழுப்பலாக பதிலளித்த முதல் மந்திரி பசவராஜ் பொம்மை, ‘‘இரவு 9.30 மணி ஆகியிருந்ததை கவனிக்கவில்லை. தார்வார் மாவட்ட வளர்ச்சிக்காக முன்னாள் முதல் மந்திரி ஜெகதீஷ் ஷெட்டர், மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி உள்ளிட்டோரை சந்தித்து பேசினேன். ஆனந்த் சிங் துறை ஒதுக்கீடு விவகாரத்தால் அதிருப்தியில் இருந்து வருகிறார். அவரை விரைவில் சமாதானம் செய்து அப்பிரச்சினை சரிசெய்யப்படும்’’ என கூறினார்.

    இதற்கிடையே, முதல் மந்திரி பசவராஜ் பொம்மை ஊரடங்கை மீறி பொதுமக்களிடம் மனுக்களை பெற்றதாகக் கூறி சமூக வலைதளங்களில் வீடியோக்களும், புகைப்படங்களும் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. அதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

    கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் இரவு நேர ஊரடங்கை அறிவித்ததே முதல் மந்திரி தான். அப்படி இருக்க இரவு 9 மணிக்கு இரவு நேர ஊரடங்கு தொடங்கிய நிலையில் ஊரடங்கு விதிகளை அறிவித்த முதல் மந்திரியே இவ்வாறு நடந்து கொள்ளலாமா? என பலரும் கேள்வி எழுப்பி சமூக வலைதளங்களில் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
    Next Story
    ×