search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தடுப்பூசி போடும் பணி
    X
    தடுப்பூசி போடும் பணி

    இந்தியாவில் செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசி அளவு 50 கோடியை கடந்தது -பிரதமர் பெருமிதம்

    40 கோடி முதல் 50 கோடி வரையிலான பத்து கோடி தடுப்பூசி டோஸ்கள் வெறும் 20 நாட்களில் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய மந்திரி மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    இந்தியாவில் ஜனவரி 16-ந் தேதி முதல் கொரோனா தடுப்பூசி திட்டம் நடைமுறையில் உள்ளது. ஆரம்பத்தில் கொரோனா தடுப்பூசி குறித்த அச்சம் காரணமாக பொதுமக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள தயங்கினர். அதன்பின்னர் தடுப்பூசி குறித்து தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதையடுத்து, மக்கள் ஆர்வமாக வந்து தடுப்பூசி போடுகின்றனர். இதனால் தடுப்பூசி போடும் பணி வேகமெடுத்தது.

    இந்நிலையில், இந்தியாவில் செலுத்தப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 50 கோடியை கடந்துள்ளது. கொரோனாவுக்கு எதிரான போரில் இது முக்கிய மைல்கல் ஆகும்.

    தடுப்பூசி திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தி வரும் சுகாதாரப் பணியாளர்களுக்கு சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா வாழ்த்து தெரிவித்துள்ளார். 50 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தியிருப்பது வரலாற்று சாதனை என்றும், பிரதமர் மோடியின் தடுப்பூசி திட்டத்தின்கீழ் இந்த மைல்கல்லை கடந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    தடுப்பூசி  திட்டத்தின் வேகம் தொடர்பான புள்ளிவிவரம்

    இந்தியா 85 நாட்களில் 10 கோடி டோஸ் என்ற மைல்கல்லை எட்டியது. அதன்பின்னர் 45 நாட்களில் 10 கோடியிலிருந்து 20 கோடியையும், 29 நாட்களில் 20 கோடியிலிருந்து 30 கோடியையும், 24 நாட்களில் 30 கோடியிலிருந்து 40 கோடியையும் எட்டியது. தற்போது, 40 கோடி முதல் 50 கோடி வரையிலான பத்து கோடி தடுப்பூசி டோஸ்கள் வெறும் 20 நாட்களில் செலுத்தப்பட்டுள்ளது, எனவும் மத்திய மந்திரி மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

    பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ‘கொரோனாவுக்கு எதிரான போரில் இந்தியாவுக்கு வலுவான உத்வேகம் கிடைத்துள்ளது. இலவச தடுப்பூசி திட்டத்தின்கீழ் மக்களுக்கு தடுப்பூசி கிடைப்பதை உறுதி செய்வோம்’  என கூறி உள்ளார்.
    Next Story
    ×