search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரதமர் மோடி
    X
    பிரதமர் மோடி

    போலீசார் மீதான தவறான எண்ணத்தை மாற்ற வேண்டும் - பயிற்சி ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு மோடி அறிவுரை

    களத்தில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முடிவுகளும் தேசிய நலன்களை மனதில் வைத்து ஒரு தேசிய முன்னோக்கை மையப்படுத்தியதாக இருக்க வேண்டும் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
    புதுடெல்லி:

    ஐதராபாத்தை மையமாக கொண்டு செயல்படும் சர்தார் வல்லபாய் படேல் தேசிய போலீஸ் அகாடமியில் ஐ.பி.எஸ். பயிற்சி பெற்று வரும் 71 மற்றும் 72-வது பிரிவு இளம் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி நேற்று கலந்துரையாடினார்.

    காணொலி காட்சி மூலம் நடந்த இந்த நிகழ்ச்சியில் இளம் அதிகாரிகளுக்கு அவர் பல்வேறு அறிவுரைகளை வழங்கினார். அந்தவகையில் அவர் பேசும்போது கூறியதாவது:-

    ஒரு சிறந்த போலீஸ் துறை மற்றும் அதற்கான பயிற்சி கட்டமைப்புகளை கட்டியெழுப்ப கடந்த 75 ஆண்டுகளாக இந்தியா முயற்சித்து வருகிறது. இந்த பணிகள் சமீபத்திய ஆண்டுகளில் அதிகம் முன்னேற்றம் கண்டுள்ளது.

    கடந்த 1930 முதல் 1947 வரையிலான காலகட்டத்தில் நாட்டின் இளம் தலைமுறையினர் முன்னோக்கி வந்தனர். ஒட்டுமொத்த இளம் தலைமுறையினரும் ஒரே குறிக்கோளுக்காக ஒன்றிணைந்தனர். அதே உணர்வை தற்போது உங்களிடம் இருந்தும் எதிர்பார்க்கிறோம்.

    அதாவது அன்றைய இளைஞர்கள் நாட்டின் விடுதலைக்காக போராடினர். இன்று நீங்கள் ஒரு சிறந்த ஆட்சிக்காக முன்னோக்கி வர வேண்டும். ஒவ்வொரு துறையிலும், ஒவ்வொரு மட்டத்திலும் மாறுதல் ஏற்பட்டுவரும் ஒரு காலத்தில் உங்கள் பயணத்தை தொடங்குகிறீர்கள்.

    நாட்டின் 25 ஆண்டுகால வளர்ச்சியில், உங்கள் வாழ்க்கையின் வருகிற 25 ஆண்டுகள் மிகவும் முக்கியமானது. அதனால்தான் உங்கள் தயார் நிலை, மனநிலை உள்ளிட்டவை இந்த மிகப்பெரிய குறிக்கோளை எட்டுவதில் இருக்க வேண்டும்.

     ஐ.பி.எஸ். பயிற்சியாளர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடலில் ஈடுபட்டபோது எடுத்த படம்.

    நீங்கள், ஒரே இந்தியா, வளமான இந்தியாவின் கொடி ஏந்தியவர்கள் என்பதை எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும். எனவே நாட்டுக்கே முதலிடம், எப்போதும் முதலிடம் என்ற உணர்வு உங்களின் ஒவ்வொரு செயலிலும் எதிரொலிக்க வேண்டும்.

    களத்தில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முடிவுகளும் தேசிய நலன்களை மனதில் வைத்து ஒரு தேசிய முன்னோக்கை மையப்படுத்தியதாக இருக்க வேண்டும்.

    பொதுமக்கள் இடையே போலீசார் மீது ஒரு எதிர்மறை எண்ணம் நிலவுகிறது. இது மிகப்பெரும் சவாலாகும். கொரோனா தொற்றின் தொடக்க காலத்தில், அதாவது மக்களுக்கு போலீசார் உதவிகள் புரிந்தபோது இந்த எதிர்மறை எண்ணங்கள் சற்று மாறியிருந்தன. ஆனால் தற்போது பழைய எதிர்மறை எண்ணங்களை நோக்கியே சூழ்நிலை தள்ளியிருக்கிறது.

    நாட்டின் பாதுகாப்பு, சட்டம்-ஒழுங்கை பராமரித்தல் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளின்போது போலீசார் தங்கள் உயிரை கூட தியாகம் செய்கிறார்கள். பல நாட்களுக்கு அவர்களால் வீட்டுக்கு செல்ல முடியாது. பண்டிகை காலங்களை கூட தங்கள் குடும்பத்தினருடன் செலவிட முடியாது.

    ஆனாலும் மக்களிடம் எதிர்மறை எண்ணங்களை மாற்ற முடியவில்லை. எனவே இந்த எதிர்மறை எண்ணங்களை மாற்ற வேண்டிய பொறுப்பு, போலீஸ் துறைக்கு வரும் இளைஞர்களாகிய உங்களையே சாரும்.

    இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் உள்துறை மந்திரி அமித்ஷாவும் பங்கேற்றார்.

    இந்த அகாடமியின் 71 மற்றும் 72-ம் பிரிவுகளில் பயிற்சி பெற்று வரும் 178 அதிகாரிகள் வருகிற 6-ந் தேதியுடன் பயிற்சி முடித்து வெளியேறுகிறார்கள். இதில் 33 பேர் பெண்கள் ஆவர். மேலும் நேபாளம், பூடான், மாலத்தீவு, மொரீஷியஸ் ஆகிய நட்பு நாடுகளை சேர்ந்த 34 அதிகாரிகளும் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×