search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வெங்கையா நாயுடு
    X
    வெங்கையா நாயுடு

    பாராளுமன்ற முடக்கத்தால் வெங்கையா நாயுடு கவலை: கடும் எச்சரிக்கையும் விடுத்தார்

    கேள்வி நேரத்தில் பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக கேள்விகளை எழுப்பி, சம்பந்தப்பட்ட மந்திரிகளிடம் இருந்து பதிலை பெறுங்கள். பூஜ்ஜிய நேரத்தில் பொது பிரச்சினைகளை எழுப்புங்கள்.
    புதுடெல்லி :

    பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை பெகாசஸ் விவகாரம் கடும் பாதிப்புக்கு உட்படுத்தி இருக்கிறது. அத்துடன் வேளாண் சட்டங்கள், விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகளையும் முன்வைத்து எதிர்க்கட்சிகள் கடும் போர்க்கொடி தூக்கி வருவதால் தொடரின் முதல் நாளில் இருந்தே இரு அவைகளிலும் அலுவல்கள் முடங்கி வருகின்றன. இவ்வாறு தொடர்ந்து வரும் இத்தகைய அமளியால் மாநிலங்களவை தலைவரும், துணை ஜனாதிபதியுமான வெங்கையா நாயுடு கடும் அதிருப்தி அடைந்துள்ளார். இந்த கவலையை நேற்று அவர் அவையில் வெளியிட்டார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    அவையில் சில உறுப்பினர்கள் கோஷங்கள் அடங்கிய அட்டைகளை ஏந்துகிறார்கள். சிலரோ விசில் அடிக்கின்றனர். இன்னும் சிலர் அவையின் மையப்பகுதியில் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். வேறு சிலர் தங்கள் கைகளை அவைக்காவலர்களின் தோளில் போட்டு அதை வேடிக்கை பார்க்கின்றனர்.

    இந்த நடவடிக்கைகள் அனைத்தும் அவையின் தரத்தை கீழிறக்குகின்றன. இதனால் நான் மிகப்பெரும் கவலையில் உள்ளேன். சபையின் கண்ணியம் மற்றும் ஒழுக்கத்தை காத்துக்கொள்ளுங்கள் என்று மட்டுமே உறுப்பினர்களிடம் கேட்டுக்கொள்கிறேன். இதுதான் எனது தாழ்மையான வேண்டுகோள்.

    அவைக்கு என ஒரு ஒழுக்கம், புகழ் மற்றும் மரபுகள் உள்ளன. அவை காக்கப்பட வேண்டும். பிரச்சினைகளை முன்வைத்து போராடுவது நல்லதுதான், ஆனால் அவையின் கண்ணியம் மற்றும் புகழ் விவகாரத்தில் எந்த சமரசமும் கூடாது. பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு. சபையின் பொறுமைக்கான எல்லையை யாரும் மீறக்கூடாது.

    தற்போதைய நிலையில் 2 தீர்வுகள் மட்டுமே என்னிடம் உள்ளன. அதாவது எதிர்க்கட்சி உறுப்பினர்களின் இந்த தவறான செயல்களை அனுமதித்து அவையை பஜார் ஆக்குவது அல்லது நடவடிக்கை எடுப்பது.

    இந்த மேடையில் இருந்து இதை கூறுவதற்கு வருத்தமாகத்தான் இருக்கிறது. இ்ப்படி கீழ் மட்டத்துக்கு செல்வார்கள் என எனது உறுப்பினர்களை நான் எதிர்பார்க்கவில்லை.

    முந்தைய ஆட்சியிலும் இதுபோன்ற முடக்கம் நடந்திருப்பதாக சிலர் என்னிடம் கூறினார்கள். ஆனால் அதற்குள் நான் செல்ல விரும்பவில்லை.

    பாராளுமன்றத்தில் கேள்வி நேரமும், பூஜ்ஜிய நேரமும் உறுப்பினர்களுக்கான சொத்தே தவிர, அரசுக்கானது அல்ல. கேள்வி நேரத்தில் பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக கேள்விகளை எழுப்பி, சம்பந்தப்பட்ட மந்திரிகளிடம் இருந்து பதிலை பெறுங்கள். பூஜ்ஜிய நேரத்தில் பொது பிரச்சினைகளை எழுப்புங்கள்.

    ஆனால் கேள்விகளையோ அல்லது பூஜ்ஜிய நேர விவகாரங்களையோ எழுப்புமாறு உறுப்பினர்களை அழைத்தால் யாரும் பதிலளிப்பதில்லை, காரணம் அவர்கள் அனைவரும் அவையின் மையப்பகுதியில் முகாமிட்டு இருக்கிறார்கள்.

    இவ்வாறு வெங்கையா நாயுடு தனது கவலையை வெளியிட்டார்.
    Next Story
    ×