search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உத்தவ் தாக்கரே, தேவேந்திர பட்னாவிஸ் சந்தித்தபோது பேசிய காட்சி தான் இது.
    X
    உத்தவ் தாக்கரே, தேவேந்திர பட்னாவிஸ் சந்தித்தபோது பேசிய காட்சி தான் இது.

    உத்தவ் தாக்கரே- பட்னாவிஸ் சந்திப்பு: அரசியலில் திடீர் பரபரப்பு

    வெள்ளச்சேதத்தை பார்வையிட சென்ற இடத்தில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே, எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் திடீரென சந்தித்து பேசியது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    மும்பை

    மராட்டியத்தில் கடந்த வாரம் கொங்கன் மண்டலம், மேற்கு மராட்டிய பகுதிகளில் இடைவிடாமல் பலத்த மழை கொட்டி தீர்த்தது.

    இந்த கனமழைக்கு தானே, புனே, ராய்காட், ரத்னகிரி, சிந்துதுர்க், சத்தாரா, சாங்கிலி உள்ளிட்ட மாவட்டங்கள் பலத்த சேதத்தை சந்தித்தன. மேலும் மழை காரணமாக ராய்காட், ரத்னகிரி, சத்தாரா பகுதிகளில் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது.

    இந்த நிலச்சரிவிற்கு ராய்காட்டில் மட்டும் சுமார் 100 பேர் உயிரிழந்தனர். மேலும் சத்தாராவில் 45 பேரும், ரத்னகிரியில் 35 பேரும் உயிரிழந்து இருந்தனர். மாநிலம் முழுவதும் 213 பேர் வெள்ளம், நிலச்சரிவுக்கு பலியாகி இருந்தனர். இதேபோல வெள்ளத்தில் சிக்கி 29 ஆயிரம் கால்நடைகளும் செத்தன. இதுதவிர ஆயிரக்கணக்கான மக்கள் வெள்ளத்தில் தங்களது வீடு, உடைமைகளை இழந்தனர்.

    இந்தநிலையில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே ஆய்வு செய்து வருகிறார். அவர் ராய்காட், ரத்னகிரி உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளப்பாதிப்புகளை ஆய்வு செய்து இருந்தார். மேலும் வெள்ளம் பாதித்த பகுதிகளில் நிவாரணம் வழங்குவது குறித்து அதிகாரிகள், காப்பீடு நிறுவனங்களுடன் ஆலோசனை நடத்தினார்.

    முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே நேற்று கோலாப்பூர் மாவட்டத்தில் வெள்ளப்பாதிப்புகளை ஆய்வு செய்தார். இதில் சாகுவாடி பகுதியில் ஆய்வு செய்து கொண்டு இருந்த போது, அங்கு வெள்ளப்பாதிப்புகளை பார்வையிட எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிசும் வந்தார். இதனால் அவர்கள் ஒருவரை, ஒருவர் சந்தித்து கொண்டனர். இதையடுத்து 2 பேரும் சிறிது நேரம் நின்று அங்கு பேசினர். மேலும் அவர்கள் மிக நெருக்கமாக நின்று பேசியது வியப்பை ஏற்படுத்தியது. வெள்ளப்பாதிப்புகளை ஆய்வு செய்ய சென்ற இடத்தில் முதல்-மந்திரி, எதிர்க்கட்சி தலைவர் சந்தித்து கொண்டது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த சந்திப்பு குறித்து மேல்-சபை எதிர்க்கட்சி தலைவர் பிரவீன் தரேகர் (பா.ஜனதா) கூறுகையில், "தேவேந்திர பட்னாவிஸ் இங்கு சுற்றுப்பயணம் செய்ததை அறிந்த உத்தவ் தாக்கரே அவருக்கு தகவல் அனுப்பி வரவழைத்தார்" என்றார்.

    இந்தநிலையில் சந்திப்புக்கு பிறகு முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே கூறுகையில், "மாநிலத்தை புரட்டிபோட்டு உள்ள வெள்ளத்தை வைத்து அரசியல் செய்யக்கூடாது. ஏற்கனவே என்னிடம் 3 கட்சிகள் (சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ்) உள்ளன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் நலனுக்காக 4-வது கட்சி வருவது நல்லது தான்" என்றார்.

    இதேபோல எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ், முதல்-மந்திரியை சந்தித்த படத்தை டுவிட்டரில் பதிவிட்டு, "மீட்பு, நிவாரணப்பணிகளை துரிதப்படுத்துமாறு முதல்-மந்திரியிடம் வலியுறுத்தியதாக’’ கூறியிருந்தார்.
    Next Story
    ×