search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்கள்.
    X
    கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்கள்.

    மார்க்சிஸ்ட் நிர்வாகிகள் 8 பேர் கட்சியில் இருந்து நீக்கம்

    கேரளாவில் கூட்டுறவு வங்கி மோசடியில் தொடர்புடைய மார்க்சிஸ்ட் நிர்வாகிகள் 8 பேர் கட்சியில் இருந்து நீக்கி மேலிடம் நடவடிக்கை எடுத்துள்ளது.
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் கருவானூர் கூட்டுறவு வங்கி செயல்பட்டு வருகிறது.

    இந்த வங்கியில் ரூ.300 கோடி அளவிற்கு மோசடி நடந்ததாக கூறப்பட்டது. இது கேரளாவில் மிகப்பெரிய வங்கி மோசடி என்று எதிர்க்கட்சிகள், ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுக்கு எதிராக குற்றம் சாட்டி இருந்தனர். இதுதொடர்பாக திருச்சூர் மாவட்ட போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இதில் கூட்டுறவு வங்கி தலைவராக இருந்த திவாகரன், வங்கி மேலாளர் சுனில்குமார் மற்றும் ஜில்சன்  உள்பட பலருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இவர்கள் திருச்சூர் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் நிர்வாகிகளாகவும் இருந்தனர்.

    இந்த நிலையில் போலீஸ் விசாரணை தீவிரமடைந்ததும், இவர்கள் தலைமறைவாகி விட்டனர். சில நாட்களுக்கு முன்னர் இவர்கள் தங்கியிருந்த பகுதியில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் பொருட்கள் வாங்க வந்த காட்சிகள் சி.சி.டி.வி. கேமிராவில் பதிவாகி இருந்தது.

    இதையடுத்து அவர்கள் பதுங்கி இருந்த இடத்திற்கு சென்ற போலீசார் அவர்களை பிடித்து தனியான இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் அவர்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியில் இருந்து நீக்கி கட்சி மேலிடம் நடவடிக்கை எடுத்துள்ளது. திருச்சூர் மாவட்ட செயலாளர் திவாகரன், கருவானூர் உள்ளூர் நிர்வாகிகள் சுனில்குமார், பிஜு கிரிம், ஜில்சன் ஆகியோரை கட்சியில் இருந்து நீக்கி உள்ளனர்.

    மேலும் விஜயா, இருஞால குடா பிரேமராஜன், விஸ்வேந்திரன், உல்லாஸ் கலா கட்டி ஆகியோர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் தொடர்புடைய மற்றவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் போலீஸ் விசாரணையின் அடிப்படையில் மத்திய அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்து ரூ.300 கோடி மோசடி குறித்து விசாரணையை தொடங்கி உள்ளது.

    இந்த வழக்கு கேரள அரசியலில் பெரும் புயலை கிளப்பி உள்ளது.
    Next Story
    ×