search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    இந்தியாவில் கொரோனாவில் இருந்து மீள சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 2-வது நாளாக அதிகரிப்பு

    இந்தியாவில் கொரோனாவில் இருந்து மீள்வதற்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை தொடர்ந்து 2-வது நாளாக அதிகரித்துள்ளது. தினசரி கொரோனா பாதிப்பும், கொரோனாவால் ஏற்படும் பலியும் குறைந்துள்ளன.
    புதுடெல்லி:

    இந்தியாவில் நேற்று முன்தினம் 42 ஆயிரத்து 15 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டது. நேற்று இது சற்றே குறைந்தது. காலை 8 மணியுடன் முடிந்த ஒரு நாளில் நாடு முழுவதும் 41 ஆயிரத்து 383 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானது.

    நேற்று முன்தினம் நாட்டில் 17 லட்சத்து 18 ஆயிரத்து 439 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதில் பாதிப்பு விகிதம் என்பது 2.41 சதவீதம் ஆகும். தொடர்ந்து 31-வது நாளாக பாதிப்பு விகிதம் 3 சதவீதத்துக்குள் கட்டுப்பட்டுள்ளது. வாராந்திர பாதிப்பு விகிதம் 2.12 சதவீதம் ஆகும்.

    நேற்று முன்தினம் ஒரே நாளில் 3,998 பேர் பலியானதாக பதிவானது. மராட்டிய மாநிலத்தில் விடுபட்ட இறப்புகளை கணக்கில் கொண்டு வந்திருப்பதே இந்தப் பலி எண்ணிக்கை உயர்வுக்கு காரணம் என சொல்லப்பட்டது.

    நேற்று கொரோனா பலி எண்ணிக்கை குறிப்பிடத்தக்க வகையில் குறைந்துள்ளது. காலை 8 மணியுடன் முடிந்த ஒரு நாளில் 507 பேர் மட்டுமே இறந்துள்ளனர். இதனால் மொத்த இறப்பு எண்ணிக்கை 4 லட்சத்து 18 ஆயிரத்து 987 ஆக அதிகரித்துள்ளது.

    நேற்று மராட்டியத்தில் 165 பேரும், கேரளாவில் 105 பேரும் இறந்துள்ளனர். இறப்புவிகிதம் 1.34 சதவீதமாக நீடிக்கிறது.

    இருந்தபோதும் அந்தமான் நிகோபார், சண்டிகார், தத்ராநகர்ஹவேலி டாமன் டையு, குஜராத், இமாசலபிரதேசம், ஜார்கண்ட், லடாக், லட்சத்தீவு, மத்திய பிரதேசம், புதுச்சேரி, ராஜஸ்தான், உத்தரகாண்ட் ஆகிய 12 மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் கொரோனா உயிரிழப்புகளில் இருந்து தப்பின.

    கொரோனா தொற்றில் இருந்து நேற்று ஒரு நாளில் 38 ஆயிரத்து 652 பேர் நலம் பெற்றனர். இதுவரையில் இந்தியாவில் 3 கோடியே 4 லட்சத்து 29 ஆயிரத்து 339 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணம் அடைந்துள்ளனர்.

    இந்தியாவில் கொரோனாவில் இருந்து மீள்வதற்காக சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை நேற்று தொடர்ந்து 2-வது நாளாக அதிகரித்துள்ளது.

    #நேற்று இந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்தது. 2,224 பேர் நேற்று சிகிச்சைக்கு கூடுதலாக சேர்ந்துள்ளனர். இது சற்றே கவலை தருகிற அம்சம் என்பது பதிவு செய்யத்தக்கது.

    நேற்று காலை 8 மணி நிலவரப்படி நாட்டில் மொத்தம் 4 லட்சத்து 9 ஆயிரத்து 394 பேர் சிகிச்சை பெற்றனர். இது மொத்த பாதிப்பில் 1.31 சதவீதம் ஆகும்.

    இந்த தகவல்களை மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
    Next Story
    ×