search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாநிலங்களவை
    X
    மாநிலங்களவை

    மத்திய மந்திரியிடம் இருந்து பெகாசஸ் அறிக்கையை பிடுங்கி கிழித்து எறிந்த திரிணாமுல் காங். எம்.பி.

    எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக, மாநிலங்களவையில் தகவல் தொழில்நுட்பத்துறை மந்திரி அஷ்வின் வைஷ்ணவ் தனது உரையை சுருக்கமாக முடித்துக்கொண்டார்.
    புதுடெல்லி:

    இஸ்ரேலை சேர்ந்த என்எஸ்ஓ என்ற நிறுவனம் தயாரித்த பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் இந்தியாவில் 40-க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள், முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்கள், இரு மத்திய அமைச்சர்கள், நீதிபதி ஒருவர் என சுமார் 300 பேரின் செல்போன் ஒட்டுகேட்கப்பட்டதாக செய்தி வெளியானது. இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது. பாராளுமன்றத்தில்எதிர்க்கட்சியினர் இப்பிரச்சனையை எழுப்பி அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த மென்பொருளை பயன்படுத்தி அரசு ஒட்டு கேட்கவில்லை என மத்திய அரசு விளக்கம் அளித்தபோதிலும் எதிர்க்கட்சிகள் விடுவதாக இல்லை.

    மூன்றாவது நாளாக இன்றும் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. பெகாசஸ் தவிர ஊடக அலுவலகங்களில் நடைபெறும் வருமான வரி சோதனை உள்ளிட்ட விவகாரங்களை முன்வைத்து உறுப்பினர்கள் முழக்கங்கள் எழுப்பினர். அவையின் மையப்பகுதிக்கு வந்தும் அமளியில் ஈடுபட்டனர்.

    மாநிலங்களவையில் பேசிய மந்திரி அஷ்வின் வைஷ்ணவ்

    எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக, மாநிலங்களவையில் தகவல் தொழில்நுட்பத்துறை மந்திரி அஷ்வின் வைஷ்ணவ் தனது உரையை சுருக்கமாக முடிக்க நேரிட்டது. கடும் அமளிக்கிடையே பெகாசஸ் விவகாரம் தொடர்பாக மந்திரி அஷ்வின் வைஷ்ணவ் பேசினார். அப்போது, அவரிடம் இருந்த பேப்பாக்ளை திரிணாமுல் காங்கிரஸ் எம்பி சாந்தனு சென், பிடுங்கி கிழித்து எறிந்தார். அந்த பேப்பர்கள் துணை சபாநாயகர் அருகில் பறந்து போய் விழுந்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த மந்திரி வைஷ்ணவ், தனது அறிக்கையை மேஜையில் வைத்துவிட்டு உரையை முடித்துக்கொண்டார்.

    மத்திய மந்திரி ஹர்தீப் சிங் பூரிக்கும் திரிணாமுல் காங்கிரஸ் எம்பிக்கும் இடையே கடுமையான வார்த்தை மோதல் ஏற்பட்டது. அவைக்காவலர்கள் தலையிட்டதையடுத்து நிலைமை கட்டுக்குள் வந்தது. தொடர்ந்து அமளி நீடித்ததால் நாளை வரை அவை ஒத்திவைக்கப்பட்டது. இதேபோல் மக்களவையும் அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்டது.

    Next Story
    ×