search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரியங்கா காந்தி
    X
    பிரியங்கா காந்தி

    கூட்டணி அமைப்பதற்கு காங்கிரஸ் திறந்த மனதுடன் உள்ளது - பிரியங்கா தகவல்

    கூட்டணிக்காக கட்சிகள் முன்வந்தால் அது குறித்து பரிசீலிக்கப்படும் எனவும் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான சல்மான் குர்ஷித் சமீபத்தில் கூறியிருந்தார்.
    லக்னோ:

    உத்தரபிரதேச சட்டமன்ற தேர்தலில் கூட்டணி அமைப்பதற்கு காங்கிரஸ் கட்சி திறந்த மனதுடன் இருப்பதாக கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா கூறியுள்ளார்.

    உத்தரபிரதேசத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை சந்திப்பதற்கான ஆயத்த பணிகளை கட்சிகள் தொடங்கி விட்டன.

    காங்கிரசை பொறுத்தவரை கட்சியின் பொதுச்செயலாளரும், மாநில காங்கிரஸ் பொறுப்பாளருமான பிரியங்கா கடந்த 3 நாட்களாக மாநிலத்தில் கட்சி நிர்வாகிகளை சந்தித்து தேர்தல் தொடர்பான ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறார்.

    மாநிலத்தில் மொத்தமுள்ள 403 தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடவும் தயாராக இருப்பதாகவும், அதேநேரத்தில் கூட்டணிக்காக கட்சிகள் முன்வந்தால் அது குறித்து பரிசீலிக்கப்படும் எனவும் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான சல்மான் குர்ஷித் சமீபத்தில் கூறியிருந்தார்.

    இந்த நிலையில் லக்னோவில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டிருந்த பிரியங்காவிடம், மாநில சட்டசபை தேர்தலில் கட்சி தனித்து போட்டியிடுமா? அல்லது கூட்டணி அமைத்து போட்டியிடுமா? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

    அதற்கு பதிலளிக்கும்போது பிரியங்கா கூறியதாவது:-

    தேர்தலுக்கு அதிக நாட்கள் இருப்பதால், இது குறித்து தற்போதே பேசுவது தேவையற்றது. அதேநேரம் கூட்டணி வாய்ப்புகளை நான் மறுக்கவில்லை. கூட்டணி விவகாரத்தில் நாங்கள் எதிர் மனநிலையில் இல்லை. திறந்த மனதுடன்தான் இருக்கிறோம்.

    எங்கள் நோக்கம் பா.ஜனதாவை வீழ்த்துவதுதான். எனவே கூட்டணி விவகாரத்தில் பிற கட்சிகளும் திறந்த மனதுடன் இருக்க வேண்டும்.

    கோப்புபடம்

    நான் மாநிலத்துக்கு வரும்போது கட்சிக்கு ஊடக வெளிச்சம் கிடைக்கிறது, இல்லாதபோது யாரும் கண்டுகொள்வதில்லை. அதனால்தான் நான் இல்லாதபோது இங்கு காங்கிரஸ் செயல்படாமல் இருப்பதுபோல தோன்றுகிறது. ஆனால் எங்கள் பணிகள் அமைதியாக நடந்து கொண்டுதான் இருக்கிறது.

    இந்த கொரோனா காலத்தில் நாங்கள் அதிக பணிகளை மேற்கொண்டிருக்கிறோம். குறைகளை நாங்கள்தான் சுட்டிக்காட்டுகிறோம். எங்கள் கட்சி 30-32 ஆண்டுகளாக அதிகாரத்திற்கு வராமல் உள்ளது. இதனால் அது பலவீனமாகிவிட்டது.

    இருப்பினும் கட்சியை வலுப்படுத்த முழு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும் நிறைய ஆற்றல் கட்சிக்குள் வந்துள்ளது. மாநிலத்தில் காங்கிரஸ் சேவாதளத்தை சீரமைக்க திட்டங்கள் உள்ளன.

    நான் சுற்றுலா அரசியல்வாதி அல்ல. என்னையும், ராகுல் காந்தியையும் தீவிர அரசியல்வாதிகள் இல்லை என காட்டுவதற்காக பா.ஜனதா மேற்கொள்ளும் பொய் பிரசாரம் இது.

    இவ்வாறு பிரியங்கா கூறினார்.
    Next Story
    ×