search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அனைத்து கட்சி குழுவினர் மத்திய மந்திரியுடன் சந்திப்பு
    X
    அனைத்து கட்சி குழுவினர் மத்திய மந்திரியுடன் சந்திப்பு

    மேகதாது அணை பிரச்சினை- அனைத்து கட்சி குழுவினர் மத்திய மந்திரியுடன் சந்திப்பு

    காவிரியின் குறுக்கே எந்த புதிய அணையும் கட்டக்கூடாது என்று உத்தரவு உள்ள நிலையில் கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்ட முயற்சிப்பதற்கு தமிழகம் கடும் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் கூறினார்கள்.
    சென்னை:

    கர்நாடக அரசு மேகதாதுவில் காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டுவதற்கு வேகமான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

    இந்த முயற்சிகளை தடுக்கும் விதத்தில் தமிழக அரசு சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

    இது குறித்து அனைத்து சட்டமன்ற கட்சி பிரதிநிதிகளுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி இருந்தார். அப்போது மேகதாதுவில் கர்நாடகா அணை கட்ட அனுமதிக்க கூடாது என்பதை மத்திய அரசிடம் வலியுறுத்துவதற்காக தமிழக சட்டமன்ற கட்சி பிரதிநிதிகள் அடங்கிய குழு டெல்லி செல்வது என்று முடிவு செய்யப்பட்டிருந்தது.

    மேகதாது அணை

    அதன்படி அமைச்சர் துரைமுருகன் தலைமையில் 13 கட்சி நிர்வாகிகள் நேற்று டெல்லி சென்றிருந்தனர்.

    இந்த குழுவினர் இன்று மதியம் ஜல்சக்தி துறை மந்திரி கஜேந்திர சிங் செகாவத்தை சந்தித்து அனைத்து கட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மான நகலை வழங்கினார்கள்.

    காவிரியின் குறுக்கே எந்த புதிய அணையும் கட்டக்கூடாது என்று உத்தரவு உள்ள நிலையில் கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்ட முயற்சிப்பதற்கு தமிழகம் கடும் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் கூறினார்கள்.

    காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை மீறும் வகையில் மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகம் முயற்சிப்பதால் அதற்கு எந்தவித அனுமதியும் கொடுக்க கூடாது என்றும் வலியுறுத்தி தீர்மான நகலை வழங்கினார்கள்.

    அமைச்சர் துரைமுருகனுடன் தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, தமிழக காங்கிரஸ் துணைத் தலைவர் கோபண்ணா, மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, பா.ஜ.க. மாநில வழக்கறிஞர் பிரிவு தலைவர் பால்கனகராஜ், இந்திய கம்யூனிஸ்டு முன்னாள் எம்.எல்.ஏ. பெரியசாமி, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், புரட்சி பாரதம் பூவை ஜெகன் மூர்த்தி ஆகியோரும் மத்திய மந்திரி சந்திப்பின்போது உடன் இருந்தனர்.



    Next Story
    ×