search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான்
    X
    கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான்

    ஆளுநரின் உண்ணாவிரத போராட்டம்... அரசியல் கட்சிகள் சொல்வது என்ன?

    மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதால், ஆளுநர் போராட்டத்தில் பங்கேற்கும் நிலைக்கு தள்ளப்பட்டதாக பாஜக மாநிலத் தலைவர் கே.சுரேந்திரன் தெரிவித்தார்.
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் கடந்த மாதம் 3 இளம் பெண்கள் வரதட்சணைக் கொடுமையால் உயிரிழந்ததாக புகார் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த சம்பவம் கேரளாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதோடு, முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான அரசுக்கு நெருக்கடியையும் ஏற்படுத்தியுள்ளன.

    இந்நிலையில், வரதட்சணை உள்ளிட்ட விவகாரங்களில் பெண்கள் மீதான வன்கொடுமைக்கு எதிர்ப்பு தெரிவித்த உண்ணாவிரதம் மற்றும் போராட்டம் நடத்த காந்திய அமைப்புகள் முடிவு செய்திருந்தன. அதன்படி இன்று உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கின. இந்த போராட்டத்திற்கு கேரள மாநில ஆளுநர்
     ஆரிஃப் முகமது கான் ஆதரவு தெரிவித்தார். அவர் ஆளுநர் மாளிகையில் இன்று நாள் முழுவதும் உண்ணாவிரதம் இருந்தார். 

    இதுவரை இல்லாத நிகழ்வாக, அரசாங்கத்தை வழிநடத்தும் ஆளுநரே போராட்டத்தில் இணைந்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

    வரதட்சணைக்கு எதிராக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி அரசாங்கத்தின் செயலற்ற தன்மையை உணர்த்துவதாக ஆளுநரின் உண்ணாவிரதம் உள்ளது என எதிர்க்கட்சியான காங்கிரஸ் குற்றம் சாட்டியது. 

    கேரளாவில் முன்னெப்போதும் இல்லாத வகையில், அரசாங்கத்தின் தலைவராக இருக்கும் ஆளுநரே போராட்டத்தில் ஈடுபட்டிருப்பதாகவும், ஆளுநர் எழுப்பிய பிரச்சினையானது, அரசாங்கம் வரதட்சணைக்கு எதிராக செயல்படுவதற்கான தூண்டுதலாக இருக்க வேண்டும் என்றும் மாநில காங்கிரஸ் தலைவர் கே.சுதாகரன் கூறி உள்ளார்.

    ஆளுநர் போராட்டத்தில் இணைந்ததை நியாயப்படுத்தவில்லை. ஆனால் ஆளுநர் இந்த அளவிற்கு சென்றதற்கு அரசாங்கமே பொறுப்பு என்றும் சுதாகரன் தெரிவித்தார்.

    மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதால், ஆளுநர் இந்த போராட்டத்தில் பங்கேற்கும் நிலைக்கு தள்ளப்பட்டதாக பாஜக மாநிலத் தலைவர் கே.சுரேந்திரன் தெரிவித்தார்.
    Next Story
    ×