search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வெள்ளப்பெருக்கு
    X
    வெள்ளப்பெருக்கு

    இமாசல பிரதேசத்தில் கனமழை - வெள்ளத்தால் மக்கள் வாழ்க்கை பாதிப்பு

    இமாசல பிரதேசத்தில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் கட்டிடங்கள், கார்கள் அடித்துச் செல்லப்பட்டன.
    சிம்லா:

    இமயமலை அடிவாரத்தில் அமைந்துள்ள இமாசல பிரதேச மாநிலத்தில் கனமழையால் பெரும் பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. இடைவிடாது பெய்த மழையால் பல மாவட்டங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு உள்ளது.

    குறிப்பாக, தர்மசாலாவின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதனால் பல இடங்களில் கட்டிடங்களுக்குள் வெள்ளம் சூழ்ந்திருக்கிறது. சில இடங்களில் கட்டிடங்களை வெள்ளம் அடித்துச்சென்றுள்ளது.

    அந்தவகையில் தர்மசாலாவை ஒட்டியுள்ள மாஞ்சி காட் பகுதியில் 2 கட்டிடங்களை வெள்ளம் அடித்துச்சென்றது. பாக்சுனாக்கில் அரசு பள்ளிக்கட்டிடம் உள்பட பல கட்டிடங்கள் வெள்ளத்தில் சிக்கி சேதம் அடைந்திருக்கின்றன. 

    பிரதமர் மோடி

    மண்டி-பதன்கோட் சாலையில் பாலம் ஒன்று அடித்துச்செல்லப்பட்டதால் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டு இருக்கிறது. மேல் தர்மசாலாவில் கால்வாய் ஒன்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் 4 கார்கள், ஏராளமான இருசக்கர வாகனங்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டன. கனமழை மற்றும் மோசமான வானிலை காரணமாக தர்மசாலா விமான நிலையம் மூடப்பட்டு உள்ளது.

    கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக மாநிலத்தில் பெரும்பாலான பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. எனினும் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்பட்டதாக தகவல் இல்லை. 

    இமாசல பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள இந்த பாதிப்பை உன்னிப்பாக கவனித்து வருவதாக பிரதமர் மோடி கூறியுள்ளார். மாநில அரசுக்கு தேவையான அனைத்து உதவிகளும் மேற்கொண்டு வருவதாகவும், இது தொடர்பாக மாநில அரசுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும் கூறியுள்ள அவர், பாதிக்கப்பட்ட மக்களின் பாதுகாப்புக்காக பிரார்த்திப்பதாகவும் கூறியுள்ளார்.
    Next Story
    ×