search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆம் ஆத்மி கட்சி தலைவர் சஞ்சய் சிங்குடன் அகிலேஷ் யாதவ் சந்திப்பு
    X
    ஆம் ஆத்மி கட்சி தலைவர் சஞ்சய் சிங்குடன் அகிலேஷ் யாதவ் சந்திப்பு

    பஞ்சாயத்து தேர்தலில் பின்னடைவு... சட்டமன்ற தேர்தலில் கூட்டணிக்கு தயாராகும் அகிலேஷ் யாதவ்

    மொத்தம் உள்ள 75 இடங்களுக்கு நடைபெற்ற மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் பா.ஜனதா 67 இடங்களை கைப்பற்றி சாதித்தது.
    லக்னோ:

    உத்தரபிரதேச மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த மே மாதம் நடந்த உள்ளாட்சி தேர்தலில் பா.ஜனதாவுக்கு தோல்வி ஏற்பட்டது. பிரதமர் மோடி தொகுதியான வாரணாசி மற்றும் அயோத்தி நகரங்களில் ஆளும்கட்சி படுதோல்வியை தழுவியது.

    இந்த நிலையில் உள்ளாட்சி அமைப்புகளில் ஒன்றான மாவட்ட தலைவர் எனப்படும் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் பா.ஜனதா அமோக வெற்றியை பெற்றது.

    மொத்தம் உள்ள 75 இடங்களுக்கு நடைபெற்ற மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் பா.ஜனதா 67 இடங்களை கைப்பற்றி சாதித்தது. கொரோனாவை கையாண்ட விதம் உள்ளட பல்வேறு வி‌ஷயங்களில் யோகி ஆதித்யநாத்தின் நிர்வாகம் குறித்து கடுமையாக விமர்சிக்கப்பட்டது. கட்சிக்குள்ளேயே அவருக்கு எதிர்ப்பு கிளம்பியது.

    யோகி ஆதித்யநாத்

    ஆனாலும் பா.ஜனதா மேலிடம் யோகி ஆதித்யநாத் மீது தொடர்ந்து நம்பிக்கை வைத்தது. தற்போது பெற்றுள்ள இந்த வெற்றி சட்டசபை தேர்தலுக்கு மிகுந்த ஊக்கத்தை அளிக்கும். உத்தரபிரதேச மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்கிறது.

    அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சிக்கு மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அந்த கட்சி 5 இடங்களை மட்டுமே கைப்பற்றியது.

    2016-ல் நடந்த இதே தேர்தலில் சமாஜ்வாடி கட்சி மொத்தம் உள்ள 75 இடங்களில் 60-ல் வெற்றி பெற்றிருந்தது.

    சமாஜ்வாடி கட்சி வலிமையாக இருக்கக்கூடிய மெயின்பூரி, கன்னோஜ், பெரோஷாபாத் ஆகிய இடங்களும் கூட இந்த முறை பா.ஜனதா பக்கம் போய்விட்டது. பா.ஜனதா தில்லுமுல்லு செய்து இந்த வெற்றியை பெற்றதாக சமாஜ்வாடி கட்சி குற்றம்சாட்டி உள்ளது.

    இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் சிங்கை, சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. வரும் சட்டமன்றத் தேர்தலில் இரு கட்சிகளும் கூட்டணி வைக்க சாத்தியம் இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 

    இந்த சந்திப்பு பற்றி சஞ்சய் சிங் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், பாஜகவின் அடக்குமுறை கொள்கைகள் மற்றும் சமீபத்தில் முடிவடைந்த ஜில்லா பஞ்சாயத்து தேர்தல்கள் பற்றி இருவரும் விவாதித்ததாக கூறி உள்ளார்.
    Next Story
    ×