search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    3-வது அலை அச்சுறுத்தல் எதிரொலி: மகாராஷ்டிராவில் தளர்வுகள் ரத்து

    டெல்டா பிளஸ் வைரசுக்கு மகாராஷ்டிராவில் முதல் பலி ஏற்பட்டு உள்ளது. இந்த கொடிய வைரஸ் பரவலால் 3-வது அலை அச்சுறுத்தல் காரணமாக மாநிலத்தில் 1, 2-வது பிரிவு தளர்வுகளை ரத்து செய்து அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்து உள்ளது.
    மும்பை :

    மகாராஷ்டிராவில் கடந்த ஏப்ரல் மாதம் கொரோனா 2-வது அலை பாதிப்பு உச்சத்தில் இருந்தது.

    இதையடுத்து மாநிலத்தில் கடும் கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தன. எனவே தொற்று பாதிப்பு படிப்படியாக குறைந்தது. இதையடுத்து மாநிலம் முழுவதும் 5 பிரிவுகளாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. கொரோனா பாதிப்பு சதவீதம், ஆக்சிஜன் படுக்கைகள் நிரம்பியதை அளவுகோலாக வைத்து 5 பிரிவுகள் பிரிக்கப்பட்டன.

    முதல் பிரிவில் இடம்பெறும் மாவட்ட, மாநகராட்சி பகுதிகளில் ஏறக்குறைய கட்டுப்பாடுகள் இல்லாத தளர்வுகள் வழங்கப்பட்டது. இதேபோல 2-வது பிரிவு பகுதிகளில் வணிக வளாகம், தியேட்டர்கள் திறக்கவும் அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. 3-வது பிரிவு நகரங்களில் வார நாட்களில் அனைத்து வகையான கடைகள், பூங்கா, ஜிம், அழகு நிலையங்கள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

    மகாராஷ்டிராவில் கடந்த 3 நாட்களாக மீண்டும் பாதிப்பு அதிகரித்து உள்ளது. கடந்த புதன்கிழமை பாதிப்பு மீண்டும் 10 ஆயிரத்தை தாண்டியது. நேற்று புதிதாக 9 ஆயிரத்து 677 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது. இதேபோல மேலும் 156 பேர் ஆட்கொல்லி நோய்க்கு உயிரிழந்தனர்.

    தலைநகர் மும்பையில் நேற்று புதிதாக 693 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. மேலும் 20 பேர் பலியானார்கள்.

    இதற்கிடையே நாடு முழுவதும் இதுவரை 45 ஆயிரம் மாதிரிகள் மரபணு சோதனை செய்யப்பட்டு உள்ளது. இதில் 48 பேருக்கு உருமாறிய டெல்டா பிளஸ் வைரஸ் ஏற்பட்டு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மராட்டியத்தில் மட்டும் 20 பேர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    குறிப்பாக ரத்னகிரி, ஜல்காவ் மற்றும் மும்பை உள்ளிட்ட பகுதிகளில் டெல்டா பிளஸ் வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.

    இந்தநிலையில் ரத்னகிரியில் 80 வயது மூதாட்டி ஒருவர் டெல்டா பிளஸ் வைரசுக்கு உயிரிழந்து உள்ளார். இவர் ரத்னகிரியில் உள்ள சங்கமேஷ்வர் பகுதியை சேர்ந்தவர் ஆவார்.

    இவர் கடந்த சில நாட்களுக்கு முன் ரத்னகிரி மாநகராட்சி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்து உள்ளார். இவர் மராட்டியத்தில் டெல்டா பிளஸ் வைரசுக்கு பலியான முதல் பெண் என்பது குறிப்பிடத்தக்கது.

    மகாராஷ்டிராவில்
    கொரோனா
    மீண்டும் அதிகரிப்பு மற்றும் டெல்டா பிளஸ் வைரசால் 3-வது அலை உருவாகலாம் என அஞ்சப்படுகிறது. எனவே இந்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் மாநிலத்தில் தற்போது 1, 2-வது பிரிவு தளா்வுகளை மாநில அதிரடியாக அரசு ரத்து செய்து உள்ளது.

    மேலும் அனைத்து மாவட்ட, மாநகராட்சி பகுதிகளில் குறைந்தபட்சம் 3-வது பிரிவில் இடம்பெற்றுள்ள கட்டுப்பாடுகளை அமல்படுத்த மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. மும்பை, புனே உள்ளிட்ட பகுதிகளில் தற்போது 3-வது பிரிவு கட்டுப்பாடுகள் அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    இதேபோல நோய் பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் 4, 5 பிரிவு கட்டுப்பாடுகளை அமல்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மேலும் தகுதி உள்ளவர்களில் 70 சதவீதம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணியை துரிதப்படுத்தவும் மாவட்ட, உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு மாநில அரசு அறிவுறுத்தி உள்ளது. இதேபோல கொரோனா பாதிப்பு சதவீதம், ஆர்.டி.-பி.சி.ஆர். முறையில் செய்யப்பட்ட சோதனைகளின் அடிப்படையில் கணக்கிடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
    Next Story
    ×