search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா
    X
    பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா

    கொரோனாவுக்கு மத்தியில் ராகுல் அரசியல் செய்கிறார் - பா.ஜ.க. பாய்ச்சல்

    கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் எப்போதெல்லாம் நல்லது நடக்கிறதோ, அப்போதெல்லாம் அதைத் தடம் புரளச்செய்வதற்காக ராகுல் எதையாவது செய்கிறார் என சம்பித் பத்ரா கூறியுள்ளார்.
    புதுடெல்லி:

    கொரோனா தொற்று அலைகள் தொடர்பாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, நேற்று கட்சியின் வெள்ளை அறிக்கையை வெளியிட்டார்.

    அதையொட்டி நிருபர்களிடம் பேசிய அவர், கொரோனாவின் முதல் அலையையும், 2-வது அலையையும் மத்திய அரசு மோசமாக நிர்வகித்ததின் விளைவுதான் பேரழிவை ஏற்படுத்தி விட்டது என சாடினார். மேலும், 3-வது அலை மிக மோசமானதாக இருக்கும், கொரோனா வைரஸ் புத்திசாலித்தனமானது, அது வேகமாக உருமாறுகிறது. 3-வது அலையை எதிர்கொள்ள அரசு தயாராக வேண்டும் என வலியுறுத்தினார்.

    ராகுல் காந்தி


    இதையொட்டி பதிலடி கொடுக்கிற விதத்தில் பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா, டெல்லியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நேற்றையில் இருந்தே நாங்கள் இதைப்பற்றி அஞ்சி வந்தோம். கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் எப்போதெல்லாம் நல்லது நடக்கிறதோ, அப்போதெல்லாம் அதைத் தடம் புரளச்செய்வதற்காக காங்கிரசும், ராகுலும் எதையாவது செய்கிறார்கள்.

    நேற்று (நேற்று முன்தினம்) ஒரே நாளில் 87 லட்சம் தடுப்பூசிகள் போட்டு உலகின் முதல் நாடாக இந்தியா சாதனை படைத்துள்ளது. இதில் மக்கள் உற்சாகமும், மகிழ்ச்சியும் அடைந்திருக்கிறார்கள். கொரோனாவுக்கு எதிரான போரில் இந்தியா வெற்றி பெறுகிறது என்ற உணர்வும் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில்தான், அதைத் தடம்புரளச்செய்யும் விதத்தில் ராகுல் காந்தி வெள்ளை அறிக்கை வெளியிட்டு பேசி உள்ளார்.

    கொரோனாவின் தொடக்கம் முதல் அரசின் ஒவ்வொரு நடவடிக்கை பற்றியும் காங்கிரஸ் கேள்வி எழுப்பி வந்துள்ளது.

    நாங்கள் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் முக்கியமான நடவடிக்கைகள் எடுக்கிறபோதெல்லாம் ராகுல் காந்தியும், காங்கிரசும் அந்த முயற்சிகளை தடம்புரளச்செய்யும்விதத்தில் அரசியல் செய்கிறார்கள். உள்ளபடியே எங்கள் பாதையில் தடைகளை ஏற்படுத்துவதற்காக காங்கிரஸ் உண்மையாகவே ஓய்வு ஒழிச்சலின்றி உழைக்கிறது.

    ராகுல் குழப்பத்தில் இருக்கிறார். காங்கிரஸ் முரண்பாடான கோரிக்கைகளை முன்வைக்கிறது.

    முதலில் பொது முடக்கத்தை துக்ளக் நடவடிக்கை என்றனர். பின்னர் ஏன் பொதுமுடக்கம் போடவில்லை என கேள்வி எழுப்பினர். தடுப்பூசி மீதான தயக்கத்தை முதலில் ஊக்குவித்தனர். இன்னும் எவ்வளவு காலத்துக்குத்தான் காணொலிக்காட்சி வழியாக பத்திரிகையாளர் சந்திப்பை நடத்திக்கொண்டிருக்கப்போகிறீர்கள் என்று ராகுலை கேட்க விரும்புகிறேன். எப்போது கொஞ்சம் உண்மையான வேலையை செய்வீர்கள்?

    காங்கிரஸ் ஆளும் மாநிலங்களுக்கு போய் நிலைமையை பாருங்கள். ராஜஸ்தானில் தடுப்பூசிகள் எப்படி வீணாக்கப்படுகின்றன, பஞ்சாப்பில் தடுப்பூசியால் எப்படி லாபம் பார்க்கிறார்கள், சத்தீஷ்காரில் எவ்வாறு தவறாக பயன்படுத்துகிறார்கள்? களத்துக்குப் போங்கள். ஆய்வு செய்யுங்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×