search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கலபுரகியில் ஒரு பஸ்சில் பயணிப்பதற்காக அமர்ந்திருந்த பயணிகளை படத்தில் காணலாம்.
    X
    கலபுரகியில் ஒரு பஸ்சில் பயணிப்பதற்காக அமர்ந்திருந்த பயணிகளை படத்தில் காணலாம்.

    கர்நாடகத்தில் 23 மாவட்டங்களில் இயல்புநிலை திரும்பியது

    கர்நாடகத்தில் நேற்று கொரோனா ஊரடங்கு மேலும் தளர்த்தப்பட்டு அமலுக்கு வந்தது. இதனால் 23 மாவட்டங்களில் இயல்புநிலை திரும்பியது. பஸ்கள், மெட்ரோ ரெயில்கள் ஓட தொடங்கின.
    பெங்களூரு :

    கர்நாடகத்தில் கொரோனா 2-வது அலை கடந்த மார்ச் மாதம் பரவத்தொடங்கியது.இதையடுத்து கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நோக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 27-ந் தேதி ஊரடங்கு கட்டுப்பாடுகளை மாநில அரசு விதித்தது. பஸ்-மெட்ரோ ரெயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. ஆயினும் சில வணிக நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டன. ஆனால் பெங்களூரு உள்ளிட்ட பெரிய நகரங்களில் மக்களின் நடமாட்டம் மற்றும் வாகனங்களின் போக்குவரத்து குறையவில்லை. ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதித்த பிறகும், நிலைமை மாறவில்லை என்று அரசு உணர்ந்தது.

    இதையடுத்து கடந்த மே மாதம் 11-ந் தேதி முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் மேலும் தீவிரப்படுத்தப்பட்டன. அனைத்து தொழில் நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், வணிக வளாகங்கள் மூடப்பட்டன. அத்தியாவசிய பொருட்கள், மருத்துவம், விவசாயம் சார்ந்த பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டன. அதன் பிறகும் கொரோனா பாதிப்பு என்பது தொடர்ந்து அதிகரித்தப்படி தான் இருந்தது. மேலும் கட்டுப்பாடுகள் தீவிரமாக்கப்பட்ட பிறகு, கொரோனா பரவல் குறையத்தொடங்கியது.

    ஊரடங்கு கட்டுப்பாடுகள் காரணமாக வைரஸ் பாதிப்பு குறைந்து வந்த நிலையில் தற்போது 5 ஆயிரத்திற்கும் கீழ் சரிந்துள்ளது. இதையடுத்து கர்நாடகத்தில்
    ஊரடங்கு
    கட்டுப்பாடுகள் படிப்படியாக விலக்கி கொள்ளப்பட்டு வருகின்றன. முதல்கட்டமாக கடந்த 14-ந் தேதி ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. மளிகை கடைகள், பழக்கடைகள், மருந்து கடைகள் இயங்கும் நேரம் காலை 10 மணி வரை என்று இருந்ததை மதியம் 2 மணி வரை என்று நீட்டிக்கப்பட்டது.

    கட்டுமான பணிகளுக்கு தேவையான கடைகள் திறக்கப்பட்டன. அனைத்து தொழில் நிறுவனங்களும் 50 சதவீத பணியாளர்களுடன் இயங்க அனுமதி அளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து 2-வது கட்ட ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டு, அது நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி
    கொரோனா
    பரவல் குறைவாக உள்ள பெங்களூரு உள்பட 17 மாவட்டங்களில் அனைத்து தொழில் நிறுவனங்கள், அனைத்து வணிக நிறுவனங்கள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    மளிகை, பழக்கடைகள், காய்கறி, இறைச்சி, மீன் விற்பனை கடைகள் மாலை 5 மணி வரை திறக்கலாம் என்று அரசு அறிவித்தது. அதன்படி பெங்களூரு நகரம், உத்தர கன்னடா, பெலகாவி, மண்டியா, கொப்பல், சிக்பள்ளாப்பூர், துமகூரு, பாகல்கோட்டை, கலபுரகி, ஹாவேரி, கோலார், கதக், ராய்ச்சூரு, ராமநகர், யாதகிரி, பீதர், தார்வார் ஆகிய 17 மாவட்டங்களில் மளிகை கடைகள் உள்பட அனைத்து வகையான கடைகளும் மாலை 5 மணி வரை திறக்கலாம் என்று கூறிய அரசு, மதுக்கடைகளை திறக்கவும் அனுமதி அளித்தது.

    இந்த புதிய ஊரடங்கு தளர்வுகள் கர்நாடகத்தில் நேற்று முதல் அமலுக்கு வந்தன. இதையடுத்து தலைநகர் பெங்களூருவில் பொதுமக்கள் வீடுகளை விட்டுெவளியே வந்தனர். இதனால் சாலைகளில் வாகன நெரிசல் அதிகமாக இருந்தது. பெங்களூருவின் இதய பகுதியான மெஜஸ்டிக் பி.எம்.டி.சி. பஸ் நிலையத்தில் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. ஆனால் குறைவான பஸ்களே இயக்கப்பட்டன.

    இதனால் நகரின் பல பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்படாததால், பஸ் கிடைக்காமல் பயணிகள் அவதிப்பட்டனர். பஸ்களில் 50 சதவீத இருக்கைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால் 100 சதவீத இருக்கையில் பயணிகள் அமர்ந்து இருந்தனர். இருக்கை பயன்பாடு கட்டுப்பாடுகளை அமல்படுத்த முடியாமல் நடத்துனர்கள் திணறினர். நடத்துனர் கூறியதை பயணிகள் காதில் போட்டுக்கொள்ளாமல் இருக்கையில் அருகருகே அமர்ந்து விதிமுறைகளை காற்றில் பறக்கவிட்டனர்.

    ஹாசன், உடுப்பி, தட்சிண கன்னடா, சிவமொக்கா, சாம்ராஜ்நகர், சிக்கமகளூரு, பெங்களூரு புறநகர், தாவணகெரே, குடகு ஆகிய 12 மாவட்டங்களில் மளிகை கடைகள் உள்பட பிற கடைகள் அதிகாலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை திறக்கப்பட்டு இருந்தன. அந்த மாவட்டங்களிலும் பஸ் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது. ஆட்டோ, வாடகை கார்களின் சேவையும் முழுமையான அளவில் தொடங்கியுள்ளது. மக்கள் வீடுகளை விட்டு வெளியே வந்து தங்களின் அன்றாட பணிகளை மேற்கொள்ள தொடங்கினர். கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளதால் மைசூரு மாவட்டத்தில் மட்டும் பொது முடக்கம் தொடர்ந்து அமலில் உள்ளது. அதனால் அந்த மாவட்ட மக்கள் மட்டும் தொடர்ந்து வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர்.

    பெங்களூருவில் மெட்ரோ ரெயில் சேவையும் 55 நாட்களுக்கு பிறகு தொடங்கியுள்ளது. ஆனால் மெட்ரோ ரெயில்களில் பயணிகள் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது. மேலும் குறைந்த எண்ணிக்கையில் தான் மெட்ரோ ரெயில்களும் இயக்கப்பட்டன.

    பொதுமக்கள் மீண்டும் வெளியில் நடமாட தொடங்கியுள்ளதால், கட்டுக்குள் வந்துள்ள கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துவிடுமோ என்று மாநில அரசின் சுகாதாரத்துறை அச்சம் அடைந்துள்ளது. அதனால் பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கொரோனா பரிசோதனையை அதிகரிக்க சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

    இந்த நிலையில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில் மேலும் 6 மாவட்டங்களுக்கு அதாவது சிவமொக்கா, உடுப்பி, பெங்களூரு புறநகர், பல்லாரி, சித்ரதுர்கா, விஜயாப்புராவுக்கு 2-வது கட்ட ஊரடங்கு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. இதனால் அந்த 6 மாவட்டங்களிலும் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் அனைத்து வகையான கடைகளும் மாலை வரை திறக்கப்படும். இந்த ஊரடங்கு கட்டுப்பாடுகள் வருகிற 5-ந் தேதி வரை அமலில் இருக்கும் என்று கர்நாடக அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் கர்நாடகத்தில் 23 மாவட்டங்களில் அதிக தளர்வுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

    மொத்தத்தில் மைசூரு மாவட்டத்தை தவிர்த்து மாநிலத்தின் பிற மாவட்டங்கள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளன. இதனால் அந்த மாவட்டங்களில் பொதுமக்கள் இயல்பு நிலைக்கு திரும்பினர்.
    Next Story
    ×