search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நீர் பகிர்வு தொடர்பான பேச்சுவார்த்தை
    X
    நீர் பகிர்வு தொடர்பான பேச்சுவார்த்தை

    தண்ணீர் பகிர்வு பிரச்சனைக்கு சுமூக தீர்வு... கர்நாடகா, மகாராஷ்டிரா ஒப்புதல்

    மழை மற்றும் அணைகளில் இருந்து நீர் வெளியேற்றம் குறித்த நிகழ்நேர தரவுகளை பகிர்ந்து கொள்ள இரு மாநிலங்களும் ஒப்புக் கொண்டதாக எடியூரப்பா தெரிவித்தார்.
    பெங்களூரு:

    கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களுக்கிடையே தண்ணீர் பகிர்வு தொடர்பாக பிரச்சனை நீடித்து வருகிறது. இதற்கு தீர்வு காணும் வகையில் இன்று பெங்களூருவில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கர்நாடக முதல்வர் எடியூரப்பா, உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை மற்றும் மகாராஷ்டிர நீர்வளத்துறை அமைச்சர் ஜெயந்த் பாட்டீல் ஆகியோர் கலந்துகொண்டு பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இந்த பேச்சுவார்த்தையில், இரு மாநிலங்களிலும் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வெள்ள மேலாண்மை மற்றும் தண்ணீர் வழங்குவது தொடர்பாக, சிறந்த ஒருங்கிணைப்பு மற்றும் தகவல்களை பகிர்ந்துகொள்வது என முடிவு செய்யப்பட்டது.

    எடியூரப்பா

    இதுதொடர்பாக கர்நாடக முதல்வர் எடியூரப்பா கூறுகையில், வெள்ளத்தை திறம்பட நிர்வகிப்பதற்காக கிருஷ்ணா மற்றும் பீமா நதிப் படுகையில் உள்ள அணைப்பகுதிகளில் பெய்த மழை மற்றும் தண்ணீர் வெளியேற்றம் குறித்த நிகழ்நேர தரவுகளை பகிர்ந்து கொள்ள இரு மாநிலங்களும் ஒப்புக் கொண்டுள்ளன, என்றார்.


    ‘இன்றைய கூட்டத்தில், கிருஷ்ணா மற்றும் பீமா நதிப் படுகைகளில் வெள்ள மேலாண்மை தொடர்பான பல பிரச்சினைகள் குறித்து விவாதித்தோம். அமைச்சர் மட்டத்திலும், செயலாளர்கள் மட்டத்திலும், கள மட்டத்திலும் இரு மாநிலங்களுக்கிடையில் சிறந்த ஒருங்கிணைப்பு மற்றும் தகவல்களை பகிர்ந்துகொள்ள முடிவு செய்யப்பட்டது.

    மகாராஷ்டிராவிலிருந்து நான்கு டி.எம்.சி தண்ணீரைப் பெறுவதற்கும், அதற்கு பதிலாக அந்த மாநிலத்தின் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தண்ணீரை விடுவிப்பதற்கும் ஒரு தொழில்நுட்பக் குழு செயல்படும்’ என்றும் எடியூரப்பா கூறினார்.

    இதுதவிர, துத்கங்கா அணை திட்டத்தை விரைவில் முடிக்க இரு மாநிலங்களும் ஒப்புக் கொண்டுள்ளன. இதற்கு மகாராஷ்டிராவும் நிதி வழங்கும் என அந்த மாநில நீர்வளத்துறை அமைச்சர் ஜெயந்த் பாட்டீல் தெரிவித்தார்.
    Next Story
    ×