search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மம்தா பானர்ஜி, நீதிபதி கவுசிக் சண்டா
    X
    மம்தா பானர்ஜி, நீதிபதி கவுசிக் சண்டா

    சுவேந்து அதிகாரிக்கு எதிரான தேர்தல் வழக்கில் நீதிபதியை மாற்ற சொல்லும் மம்தா- காரணம் என்ன?

    சுவேந்து அதிகாரியின் தேர்தல் வெற்றியை எதிர்த்து மம்தா பானர்ஜி தொடர்ந்த வழக்கின் விசாரணை வரும் வியாழக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
    கொல்கத்தா:

    மேற்கு வங்காள மாநிலம் நந்திகிராம் தொகுதியில் முதல்வர் மம்தா பானர்ஜியை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் சுவேந்து அதிகாரி வெற்றி பெற்றார். பல்வேறு திருப்பங்கள் நிறைந்த இந்த வாக்கு எண்ணிக்கையின் முடிவில்,  குறைவான வித்தியாசத்தில்தான் மம்தா தோல்வி அடைந்தார்.

    சுவேந்து அதிகாரியின் வெற்றியை எதிர்த்து, மம்தா பானர்ஜி கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கின் விசாரணை வியாழக்கிழமைக்கு (ஜூன் 24) ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு தற்போது நீதிபதி கவுசிக் சண்டாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

    சுவேந்து அதிகாரி

    இதற்கிடையே, தனது வழக்கை வேறு நீதிபதி விசாரிக்க வேண்டும் என்று மம்தா பானர்ஜி கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக, உயர் நீதிமன்றத்திற்கு அவர் கடிதம் அனுப்பி உள்ளார்.

    அதில், தனது வழக்கை விசாரிக்கும் நீதிபதி கவுசிக் சண்டா, கடந்த காலங்களில் பாஜகவுடன் தொடர்பில் இருந்தவர் என்பதால், எதிர்மனுதாரரான பாஜகவைச் சேர்ந்தவருக்கு சாதகமாகவே நடந்துகொள்வார் என்ற நியாயமான அச்சம் உள்ளது என குறிப்பிட்டுள்ளார். 

    மேலும், கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் நிரந்தர நீதிபதியாக நீதிபதி கவுசிக் சண்டாவை நியமிப்பதற்கு நான் ஆட்சேபனை தெரிவித்ததால், இந்த வழக்கில் அவர் ஒரு சார்பாக நடந்துகொள்வதற்கு சாத்தியம் உள்ளது என்றும் மம்தா குறிப்பிட்டுள்ளார்.

    முன்னதாக, திரிணாமல் காங்கிரஸ் கட்சியின் எம்பி டெரிக் ஓ பிரையன், நிதிபதி சண்டா குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியிருந்தார். பாஜக வழக்கறிஞர் பிரிவு கூட்டத்தில் சண்டா பங்கேற்றபோது எடுத்த புகைப்படங்களை பகிர்ந்தார். இந்த கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் திலிப் கோஷ் பங்கேற்றிருந்ததையும் சுட்டிக்காட்டினார். இதேபோல் 2019ல் பல்வேறு வழக்குகளில் பாஜக சார்பில் ஆஜரானதாகவும் கூறி உள்ளார்.
    Next Story
    ×