search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனாவுக்கு பலி
    X
    கொரோனாவுக்கு பலி

    கடந்த 89 நாட்களில் கர்நாடகத்தில் கொரோனாவுக்கு 21 ஆயிரம் பேர் உயிரிழப்பு

    கடந்த 89 நாட்களில் பெங்களூருவில் மட்டும் 7 லட்சத்து 84 ஆயிரத்து 733 பேரும், கர்நாடகத்தில் 18 லட்சத்து 11 ஆயிரத்து 908 பேரும் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டு உள்ளனர்.
    பெங்களூரு :

    கர்நாடகத்தில் கொரோனா 2-வது அலை கடந்த மே மாதம் உச்சத்தில் இருந்தது. இதனால் தினசரி பாதிப்பு, உயிரிழப்பு புதிய உச்சத்தை தொட்டு சென்றது. ஒரு நாள் பாதிப்பு 50 ஆயிரமாகவும், உயிரிழப்பு 500 ஆகவும் இருந்தது.

    கொரோனாவை கட்டுப்படுத்த மாநிலம் முழுவதும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. மேலும் கொரோனா பரிசோதனைகளும் அதிகரிக்கப்பட்டு இருந்தன. இதன் பயனாக இந்த மாத தொடக்கத்தில் இருந்து கொரோனா பாதிப்பும், உயிரிழப்பும் தொடர்ந்து குறைந்து வருகிறது.

    இந்த நிலையில் கொரோனாவுக்கு கடந்த 89 நாட்களில் கர்நாடகத்தில் 21 ஆயிரம் பேர் உயிரிழந்து உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து ஒரு தனியார் நிறுவனம் நடத்திய ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    கடந்த மார்ச் 18-ந் தேதி கர்நாடகத்தில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 12 ஆயிரத்து 415 ஆக இருந்தது. கடந்த மார்ச் 19-ந் தேதி முதல் நேற்று முன்தினம் வரை 33 ஆயிரத்து 148 பேர் இறந்து உள்ளனர். இதன்மூலம் 89 நாட்களில் 21 ஆயிரத்து 3 பேர் உயிரிழந்து உள்ளனர்.

    பெங்களூருவில் கடந்த மார்ச் 18-ந் தேதி வரை கொரோனாவுக்கு இறந்தவர்கள் எண்ணிக்கை 4,537 ஆக இருந்தது. மார்ச் 19-ந் தேதியில் இருந்து நேற்று முன்தினம் வரை 15 ஆயிரத்து 335 பேர் இறந்தனர். இதனால் கடந்த 89 நாட்களில் பெங்களூருவில் கொரோனாவுக்கு 10 ஆயிரத்து 798 பேர் இறந்தது தெரியவந்து உள்ளது.

    இந்த 89 நாட்களில் பெங்களூருவில் மட்டும் 7 லட்சத்து 84 ஆயிரத்து 733 பேரும், கர்நாடகத்தில் 18 லட்சத்து 11 ஆயிரத்து 908 பேரும் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த காலக்கட்டத்தில் பெங்களூருவில் 11 லட்சத்து 162 பேர் குணம் அடைந்தனர். கர்நாடகத்தில் 16 லட்சத்து 40 ஆயிரத்து 250 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

    மேலும் 89 நாட்களில் பெங்களூருவில் சிகிச்சையில் இருப்பவர்கள் எண்ணிக்கை 75 ஆயிரத்து 73 ஆகவும், கர்நாடகத்தில் 1 லட்சத்து 50 ஆயிரத்து 923 ஆகவும் அதிகரித்து உள்ளது. பெங்களூருவில் ஒரு நாளைக்கு சராசரியாக 121 பேர் இறந்து உள்ளனர். கர்நாடகத்தில் சராசரியாக தினசரி உயிரிழப்பு 232 ஆக இருந்து உள்ளது. தினசரி பாதிப்பு 20 ஆயிரத்து 358 ஆகவும், தினசரி குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை சராசரியாக 18 ஆயிரத்து 429 ஆகவும் இருந்து உள்ளது.

    இவ்வாறு அந்த ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
    Next Story
    ×