search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போலீசார் முன்னிலையில் பா.ஜனதா, சிவசேனாவினர் மோதிக்கொண்ட காட்சி
    X
    போலீசார் முன்னிலையில் பா.ஜனதா, சிவசேனாவினர் மோதிக்கொண்ட காட்சி

    மும்பையில் பதற்றம்: பாஜக-சிவசேனா தொண்டர்கள் இடையே கடும் மோதல்

    பாபர் மசூதியை இடித்ததில் சிவசேனா ஒருகாலத்தில் பெருமிதம் கொண்டிருந்தது. ஆனால் இப்போது அரசியல் காரணங்களுக்காக அது ராமரை அவதூறு செய்கிறது.
    மும்பை :

    அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக நிலம் வாங்கிய விவகாரத்தில் கோவில் அறக்கட்டளையில் மிகப்பெரிய மோசடி நடந்திருப்பதாக ஆம் ஆத்மி கட்சியினர் சமீபத்தில் குற்றம் சாட்டினார்.

    இந்த நிலையில் சிவசேனா இதுதொடர்பாக வெளியிட்ட தலையங்கத்தில் கோவில் அறக்கட்டளையை கடுமையாக விமர்சித்து இருந்தது. மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தி உள்ளது.

    இந்த நிலையில் சிவசேனாவின் இந்த கருத்துக்கு மராட்டிய பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

    மேலும் பாஜக கட்சியின் இளைஞர் அணியினர் நேற்று தாதரில் உள்ள சிவசேனா கட்சியின் தலைமையகமான சேனா பவனை நோக்கி ஊர்வலம் நடத்தினர்.

    இந்தநிலையில் தாதர் பகுதியை ஊர்வலம் நெருங்கியபோது அங்கு வந்த சிவசேனா கட்சியினர் பாஜக போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் வெடித்தது.

    ஒரு கட்டத்தில் நிலைமை கைமீறி செல்வதை கண்ட போலீசார் அவர்களை கலைந்து போக எச்சரித்தனர். ஆனால் போலீசார் முன்னிலையில் இரு தரப்பினரும் கைகலப்பில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில் இந்த சம்பவத்திற்கு பாஜக தலைவர்கள் ஆசிஷ் செலார், மங்கள் பிரபாத் லோதா, மேல்-சபை எதிர்க்கட்சி தலைவர் பிரவீன் தரேகர் மற்றும் பலர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
    சிவசேனா
    வினர் மீது நடவடிக்கை எடுக்ககோரி போலீஸ் நிலையம் சென்று வலியுறுத்தினர்.

    முன்னாள் மந்திரி ஆசிஷ் செலார் கூறுகையில், சிவசேனா தொண்டர்கள் எங்கள் கட்சி தொண்டர்களை மீண்டும் தாக்கினால் அவர்களுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்று நான் எச்சரிக்கிறேன். பா.ஜனதா பெண் தொண்டரையும் அவர்கள் போலீசார் முன்னிலையில் தாக்கி உள்ளனர்.

    பாபர் மசூதியை இடித்ததில் சிவசேனா ஒருகாலத்தில் பெருமிதம் கொண்டிருந்தது. ஆனால் இப்போது அரசியல் காரணங்களுக்காக அது ராமரை அவதூறு செய்கிறது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் பிரியங்கா காந்தி- வதேராவும் அவர்களின் தெய்வங்களாக மாறிவிட்டனர்” என்றார்

    இதேபோல சிவசேனா எம்.எல்.ஏ. சதா சர்வாங்கர் கூறுகையில், “பாஜக தொண்டர்கள் ஆர்ப்பாட்டம் நடத்த வருகிறார்கள் என்று முதலில் கூறப்பட்டது. பின்னர் அவர்கள் கட்சி அலுவலகத்தை தாக்கி அழிக்க வருகிறார்கள் என்று நாங்கள் அறிந்தோம். எனவே அவர்கள் அங்கு வருவதற்கு முன் தடுத்து நிறுத்தினோம்” என்றார்.

    இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.

    இதற்கிடையே பதற்றம் காரணமாக தாதர் பகுதி மற்றும் சேனா பவன் அருகே போலீசார் குவிக்கப்பட்டனர்.

    Next Story
    ×