search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கெஜ்ரிவால்
    X
    கெஜ்ரிவால்

    3-வது அலையை எதிர்கொள்வதற்காக 5,000 சுகாதார உதவியாளர்களுக்கு பயிற்சி - டெல்லி அரசு நடவடிக்கை

    டெல்லியில் கொரோனா 3-வது அலையை எதிர்கொள்வதற்காக 5 ஆயிரம் சுகாதார உதவியாளர்களை தேர்வு செய்து பயிற்சி அளிக்க இருப்பதாக முதல்-மந்திரி கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
    புதுடெல்லி:

    இந்தியாவில் கொரோனாவின் 2-வது அலை தொடர்ந்து கட்டுப்பாட்டுக்குள் வந்து கொண்டிருக்கிறது. அதேநேரம் 3-வது அலையும் இந்தியாவை தாக்கும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரித்து இருக்கிறார்கள்.

    எனவே இந்த 3-வது அலையை எதிர்கொள்ள மத்திய-மாநில அரசுகள் தயாராகி வருகின்றன. இந்த அலையில் குழந்தைகளும் பாதிக்கப்படுவார்கள் என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசுகள் முடுக்கி விட்டுள்ளன.

    அந்தவகையில் டெல்லியில் கெஜ்ரிவால் அரசு ஏற்கனவே முன்னெச்சரிக்கை பணிகளை தொடங்கி விட்டது. இதன் தொடர்ச்சியாக 3-வது அலைக்காக சுகாதார உதவியாளர்களையும் மாநில அரசு உருவாக்கி வருவதாக முதல்-மந்திரி கெஜ்ரிவால் நேற்று தெரிவித்தார்.

    ஆன்லைன் செய்தியாளர் சந்திப்பின்போது இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    டெல்லியில் கொரோனாவின் முதல் மற்றும் 2-வது அலைகளின்போது மருத்துவ மற்றும் துணை மருத்துவ பணியாளர்களுக்கு கடுமையான பற்றாக்குறை நிலவியது. எனவே 3-வது அலையை எதிர்கொள்வதற்காக 5 ஆயிரம் சுகாதார உதவியாளர்களை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இதற்காக இளைஞர்களுக்கு 2 அல்லது 3 வாரங்கள் மருத்துவ பயிற்சி அளித்து டாக்டர்கள்-நர்சுகளின் உதவியாளராக பணியமர்த்தப்படுவார்கள். இவர்கள் சமூக நர்சிங் உதவியாளர்கள் என அழைக்கப்படுவார்கள்.

    தலைநகரில் உள்ள 9 பெரிய மருத்துவ நிறுவனங்களில் இந்த இளைஞர்களுக்கு குரு கோவிந்த் சிங் இந்திரா பிரஸ்தா பல்கலைக்கழகம் இந்த பயிற்சியை வழங்கும்.

    ஆக்சிஜன் அளவை கண்டறிதல், தடுப்பூசி போடுதல், ரத்த அழுத்தம் கண்டறிதல், ஆக்சிஜன் சிலிண்டர், செறிவூட்டியை பயன்படுத்துதல் போன்ற அடிப்படை பயிற்சிகள் வழங்கப்படும்.

    பயிற்சி முடித்தபின் தேவைக்கு ஏற்ப பணிக்கு அழைக்கப்படுவார்கள். பணிக்கு ஏற்ற வகையில் ஊதியமும் வழங்கப்படும். 500 உதவியாளர்கள் கொண்ட 10 பிரிவுகள் உருவாக்கப்படும்.

    12-ம் வகுப்பு முடித்த 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் இந்த பயிற்சியில் சேரலாம். நாளை (இன்று) முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். வருகிற 28-ந்தேதி முதல் பயிற்சி தொடங்குகிறது.

    இவ்வாறு கெஜ்ரிவால் கூறினார்.
    Next Story
    ×